ஐயப்பனை எல்லாம் இழுக்கக்கூடாது ஆமா சொல்லிப்புட்டோம்..... அரசியல் கட்சிகளுக்கு கேரள தேர்தல் அதிகாரி உத்தரவு

தினகரன்  தினகரன்
ஐயப்பனை எல்லாம் இழுக்கக்கூடாது ஆமா சொல்லிப்புட்டோம்..... அரசியல் கட்சிகளுக்கு கேரள தேர்தல் அதிகாரி உத்தரவு

கேரளாவில் சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கடந்த இரு தினங்களுக்கு முன் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறியது பா.ஜ.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் தேர்தல் அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று பா.ஜ. தலைவர்கள் கூறினர். இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறினார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்னோடியாக தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ., சி.பி.எம்., சி.பி.ஐ., முஸ்லிம் லீக் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடனேயே, சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறியதற்கு பா.ஜ. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர்களும் தேர்தல் அதிகாரியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது டிக்காராம் மீனா கூறியது: தேர்தல் பிரசாரத்திற்கு மதத்தையோ, வழிபாட்டுத் தலங்களையோ பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் சட்டமாகும். மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினை மோதலை ஏற்படுத்தக் கூடாது. அதனால் தான் சபரிமலை கோயில் விவகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறினேன். எந்தக் காரணம் கொண்டும் ஐயப்பனின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்கக் கூடாது. தேர்தல் விளம்பரத்தில் ஐயப்பனின் படத்தையோ, வீடியோவையோ பயன்படுத்தக் கூடாது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோயில் ஆச்சாரம் மற்றும் நம்பிக்கை குறித்து மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது. ஆனால் இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரத்தை தேர்தலில் பயன்படுத்த தடையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை