சோனியாவின் உதவியாளர் டாம் வடக்கன் பாஜ.வில் ஐக்கியம்

தினகரன்  தினகரன்
சோனியாவின் உதவியாளர் டாம் வடக்கன் பாஜ.வில் ஐக்கியம்

புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் கட்சியில் இருந்து விலகி நேற்று பாஜ.வில் இணைந்தார்.காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தவர் டாம் வடக்கன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரான சோனியா காந்தியின் முக்கிய உதவியாளராக இருந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார்.  தொடர்ந்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜவில் இணைந்தார். பின்னர் கட்சியின் தலைவர் அமித்ஷாவை அவர் சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டாம் வடக்கன், “நான் அங்கு மிகவும் காயப்படுத்தப்பட்டேன். அதனால் தான் இப்போது இங்கு இருக்கிறேன். வீரர்களின் நேர்மை குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பிவிட்டது. நமது நிலத்தில்  பாகிஸ்தானில் தாக்குதல் மற்றும் அதற்காக காங்கிரஸ் கட்சியின் வெளிப்பாடு ஆகியவை மிகவும் வருந்தக்கூடிய ஒன்று. கனத்த மனதுடன் அந்த கட்சியில் இருந்து வெளியேறினேன். தேசிய நலனுக்கு எதிராக கட்சி  செயல்படும்போது அங்கிருந்து வெளியேறுவதை தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக கட்சிக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஆனால் தற்போது பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கொள்கையை  அந்த கட்சி வழக்கமாக்கி வருகிறது” என்றார். பாஜ சார்பில் கேரளாவில் டாம் வடக்கன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டாம் வடக்கன் குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “அவருக்கு எங்களது வாழ்த்துக்கள். அவர் இப்போது வரை பிரதமர் மோடியை அவதூறாக தான் பேசி வருகிறார்.  இதுகுறித்து மோடி மற்றும் ரவிசங்கரின் கருத்து என்ன?” என்றார்.

மூலக்கதை