‘நல்லவேளை தேவகவுடாவுக்கு 28 மகன்கள் இல்லை’: பாஜ தலைவர் ஈஸ்வரப்பா கிண்டல்

தினகரன்  தினகரன்
‘நல்லவேளை தேவகவுடாவுக்கு 28 மகன்கள் இல்லை’: பாஜ தலைவர் ஈஸ்வரப்பா கிண்டல்

பெங்களூரு: ‘‘தேவகவுடாவிற்கு 28 மகன்கள் இருந்திருந்தால், கர்நாடாகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளிலும் வேட்பாளராக நிற்க வைத்திருப்பார்” என்று அம்மாநில பாஜ தலைவர் ஈஸ்வரப்பா கூறினார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி, வாரிசு அரசியல் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காரணம்,  தேவகவுடா தற்போது எம்பியாக உள்ளார். அவரது மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராக  உள்ளார். மற்றொரு மகன் ரேவண்ணா கர்நாடக அமைச்சராக உள்ளார். குமாரசாமியின் மனைவி அனிதா எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார். ரேவண்ணாவின் மனைவி பவானி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.இந்த நிலையில் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் கவுடாவும் அரசியலில் குதிக்கிறார். அவர் மாண்டியா எம்பி தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கர்நாடக முதல்வர்  குமாரசாமி கூறுகையில், ‘‘அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது. என் மகன் நிறுத்தப்படுகிறான் என்றால் வாரிசு அடிப்படையில் அல்ல. வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை பொறுத்தே சீட்  வழங்கப்படுகிறது. எங்கள் பிள்ளைகளும் இந்த நாட்டின் குடிமக்கள் தானே, தேர்தலில் நிற்க அவர்களுக்கும் உரிமை இருக்கிறது’’ என்றார். முதல்வர் குமாரசாமி இவ்வாறு கூறியிருக்கையில், பாஜவின் மூத்த தலைவரான ஈஸ்வரப்பா ஒருபடி மேலே போய், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவகவுடா குறித்து  கிண்டலான  கருத்து ஒன்றை கூறியுள்ளார்.  அவர் கூறுகையில், ‘‘தேவகவுடாவிற்கு 28 மகன்கள் இருந்திருந்தால், கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளிலும் மகன்களை வேட்பாளர்களாக நிற்க வைத்திருப்பார். காங்கிரஸ்  அமைத்த கூட்டணியில் இருந்து நாளுக்கு நாள் ஒவ்வொரு கட்சிகளும் பிரிந்து செல்கின்றன. பாஜவின் பலம் நாளுக்கு நாள் பலமாகி கொண்டே இருக்கிறது’’ என்றார்.

மூலக்கதை