பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கு ஜெயராமன் பேச்சு நம்பும்படி இல்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி

தினகரன்  தினகரன்
பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கு ஜெயராமன் பேச்சு நம்பும்படி இல்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி

பெங்களூரு: ‘‘பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பதில்  அளித்திருப்பது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல இருக்கிறது’’ என்று  அமமுக துணை பொதுச்செயலாளர்  டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழகத்தில்  அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதி சசிகலாவை அமமுக துணை பொதுச்செயலாளர்  டி.டி.வி.தினகரன் நேற்று  சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது:18 தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அமமுக தனித்து  போட்டியிடும். யார், யாரை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டுமென்று  பொதுச் செயலாளரிடம் ஆலோசனை நடத்தினேன்.  மக்களவை தேர்தல், சட்டப்பேரவை  தேர்தல்  இரண்டிற்குமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.சிறிய கட்சியாக  இருந்தாலும் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு ஒரு தொகுதி  ஒதுக்கியிருக்கிறோம். இதை தவிர வேறு யாருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை.  பொள்ளாச்சி விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி முன்கூட்டியே  அரசியல் பிரமுகர்களின் மகன்கள் தலையீடு இல்லை என்று கூறியிருக்கிறார்.  இதேபோன்று பொள்ளாச்சி ஜெயராமனும் இந்த பாலியல் விவகாரத்தில் பதற்றத்துடன் பதில் அளித்துள்ளார். இதை பார்க்கும்போது எங்கப்பன் குதிருக்குள் இல்லை  என்பது போன்று இருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே பொள்ளாச்சி  ஜெயராமனை தெரியும்.  பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து  புகார் அளிப்பதற்கு மாநில அரசு பாதுகாப்பு கொடுக்கவேண்டும். ஆனால் தமிழக  அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இருப்பினும்  தேர்தல் நடந்து முடிந்த பின்னர் பொள்ளாச்சி விவகாரத்தில் மறைந்திருக்கும்  உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். ஒவ்வொரு விவகாரத்திலும் அரசியல்  செய்யப்படுகிறது. மிஸ்டர் கிளீன் என்று கூறிக்கொள்ளும்  பாஜ கட்சி, ஊழல்  கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. இதை இன்றைய இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

மூலக்கதை