மும்பையில் நடை மேம்பாலம் இடிந்து 5 பேர் பலி: 34 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
மும்பையில் நடை மேம்பாலம் இடிந்து 5 பேர் பலி: 34 பேர் படுகாயம்

மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினசில் நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். 34 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால்  பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மும்பையில் சி.எஸ்.எம்.டி. என சுருக்கமாக அழைக்கப்படும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில்நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து மேற்கு திசைக்கு சாலையை கடந்து செல்ல பிரிட்டீஷார் காலத்தில்  கட்டப்பட்ட நடை மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் சாலையை கடந்து டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிடத்தை ஒட்டியுள்ள அன்ஜூமன் இஸ்லாம் பள்ளி அருகே முடிகிறது. மும்பை மாநகராட்சி தலைமையகம் உட்பட பல  முக்கிய அலுவலகங்கள் இங்கே இருப்பதால் இந்த நடை மேம்பாலத்தை தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துவது வழக்கம்.இந்த நிலையில், நேற்றிரவு 7.30 மணியளவில் இந்த நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இடிந்த போது அதில் ஏராளமானோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அதே போன்று கீழே சாலையில்  பல வாகனங்கள் சென்று கொண்டிருந்ததுடன் பாதசாரிகளும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.பாலம் இடிந்த போது அதில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுடன் சேர்ந்து கீழே விழுந்தனர். கீழே சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது பாலத்தின் இடிபாடுகள் விழுந்ததில் பலர் சிக்கி  கொண்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்தேரியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர்.இடிபாடுகளில் இருந்து மூன்று பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர்கள் அபூர்வா பிரபு(35), ரஞ்சனா தாம்பே(40) ஆகிய இரு பெண்கள் மற்றும் ஜாகித் சிராஜ் கான்(32) என அடையாளம் காணப்பட்டனர். இந்த விபத்தில் 35  பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஜி.டி., செயின்ட் ஜார்ஜ் மற்றும் மற்ற மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 10 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து  விட்டதாக அந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மதுர் கெய்க்வாட் கூறினார். மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.இதற்கிடையே, பாலம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. சாலையில் விழுந்த இடிபாடுகளை அகற்றும் பணி போர்க்கால வேகத்தில்  நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை