ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா நம்பவே முடியவில்லை: ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா நம்பவே முடியவில்லை: ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் மகிழ்ச்சி

புதுடெல்லி:  ‘நம்பவே முடியவில்லை. 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்து, வரிசையாக 3 போட்டிகளில் வென்று, தொடரை கைப்பற்றியதை என்னால் நம்பவே முடியவில்லை’ என்று ஆஸி.

கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச்  மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக புதுடெல்லி பெரோஸா கோட்லா மைதானத்தில் நடந்தது.

டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 100 ரன் (106 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

கேப்டன் பிஞ்ச் 27, ஹேண்ட்ஸ்கோம்ப் 52, ஸ்டானிஸ், டர்னர் தலா 20, ரிச்சர்ட்சன் 29, கம்மின்ஸ் 15 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் 3, ஷமி, ஜடேஜா தலா 2, குல்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

50 ஓவர்களில் 273 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

தவான் 12, கேப்டன் கோஹ்லி 20, ரிஷப் பன்ட், விஜய் ஷங்கர் தலா 16 ரன் எடுத்து வெளியேற, ரோகித் ஷர்மா 56 ரன் (89 பந்து, 4 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். ஜடேஜா டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இந்தியா 28. 5 ஓவரில் 132 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது.

கேதார் ஜாதவ் - புவனேஷ்வர் ஜோடி போராடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் 7வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

புவனேஷ்வர் 46 ரன் (54 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேதார் 44 ரன் எடுத்து (57 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஷமி 3, குல்தீப் 9 ரன்னில் வெளியேற, இந்தியா 50 ஓவரில் 237 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸி. பந்துவீச்சில் ஸம்பா 3 விக்கெட், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டானிஸ் தலா 2 விக்கெட், லயன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

35 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சதம் விளாசிய ஆஸி.

அணியின் ஓபனர் உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கூறுகையில், ‘இந்திய மண்ணில் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றுவது மிகக் கடினமான சவால்.

ஆஸி. அணி நம்பர் 1 நிலையில் இருந்த போது கூட, இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வெல்ல முடியவில்லை.

இப்போது முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற தோல்விக்கு பின்னர், வரிசையாக 3 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியிருக்கிறோம். நாங்கள் வெற்றி பெற்ற 3 போட்டிகளிலுமே பேட்டிங்கில் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளோம்.

அதுவே எங்களது வெற்றிக்கு காரணம். இப்போது கொண்டாட வேண்டிய நேரம்’’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.



ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘‘நம்பவே முடியவில்லை. 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்து, வரிசையாக 3 போட்டிகளில் வென்று, தொடரை கைப்பற்றியதை என்னால் நம்ப முடியவில்லை.

எங்கள் அணி வீரர்களின் எழுச்சியும், போராட்ட குணமுமே இந்த வெற்றியை சாதித்து கொடுத்திருக்கிறது. தோல்வியில் இருந்து நாங்கள் மீண்டு வந்திருக்கிறோம்.

இந்திய அணியின் திறமையான வீரர்கள் குல்தீப், சாஹல், ஜடேஜா போன்றவர்களை சமாளிக்க வேண்டும் என்றால் உண்மையிலேயே திறமையான பேட்ஸ்மேன்களை கொண்டிருக்க வேண்டும். நாக்பூரில் இந்திய அணி எங்களை எளிதாக வீழ்த்தியது.

ஆனால் அந்த தோல்வியினால் நாங்கள் துவண்டு விடவில்லை. தோல்விக்கு பின்னரும் இந்த தொடரை நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை.

எங்களது கேம் பிளானில் நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தோம். இந்த தொடர் வெற்றி எங்கள் அணி வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கிறது.

உலகக்கோப்பை போட்டிகளை எதிர்கொள்வதற்கு அது மிகவும் அவசியம்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

கோட்டை விட்ட கோஹ்லி
விராட் கோஹ்லியின் கேப்டன்ஷிப்பில் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை முதன் முறையாக இழந்துள்ளது. மேலும் இந்திய அணி வரிசையாக சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதும் இதுவே முதல் முறை.

கடந்த 2009ம் ஆண்டு, ஆஸி. அணி, இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

அதன் பின்னர் 10 ஆண்டுகள் கழித்து இப்போது ஆஸி. அணிக்கு மீண்டும் ஒரு தொடர் வெற்றி.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2015ம் ஆண்டு, சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை