பாண்டிராஜ் கால்ஷீட் பாக்யராஜ் கண்ணனுக்கு?

தினமலர்  தினமலர்
பாண்டிராஜ் கால்ஷீட் பாக்யராஜ் கண்ணனுக்கு?

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார் கார்த்தி. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் பாண்டிராஜ்.

இதற்கிடையில் கார்த்தியின் உறவினரான எஸ்.ஆர்.பிரபு இடையில் புகுந்து, தன்னுடைய தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க கார்த்தியிடம் கால்ஷீட் வாங்கிவிட்டார். அதனால் பாண்டிராஜ் அடுத்த வருடம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கார்த்திக்காக காத்திருந்த பாண்டிராஜ், சிவகார்த்திகேயனைத் வைத்து படம் இயக்க உள்ளார்.

தற்போது 'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கைதி' படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ஒரே இரவில் நடக்கும் கதையான 'கைதி' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் கார்த்தி அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க இருக்கிறது. இதற்காக சென்னையில் மிகப்பெரிய 'செட்' அமைக்கப்பட்டு வருகிறது. பாண்டிராஜுக்கு ஒதுக்கிய தேதிகளில் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

மூலக்கதை