முதல் கேப்டன் | மார்ச் 13, 2019

தினமலர்  தினமலர்
முதல் கேப்டன் | மார்ச் 13, 2019

இந்திய மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரில் 10 ஆண்டிற்குப்பின் கோப்பை வென்று தந்த முதல் ஆஸ்திரேலிய கேப்டன் என்ற பெருமை பெற்றார் பின்ச். இதற்கு முன், 2009ல் ரிக்கி பாண்டிங் தொடரை கைப்பற்றி இருந்தார். 

5

ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 0–2 என பின்தங்கி, மீண்டு வந்து கோப்பை வென்றது 5வது முறையாக நடந்தது. ஏற்கனவே, தென் ஆப்ரிக்கா (2003, எதிர்–பாக்.,), வங்கதேசம் (2005, எதிர்– ஜிம்பாப்வே), பாகிஸ்தான் (எதிர்–இந்தியா, 2005), தென் ஆப்ரிக்கா (2006, எதிர்– இங்கிலாந்து) அணிகள் இந்த சாதனையை எட்டி இருந்தன.

எல்லாமே ‘6’

கடந்த 2015ல் சொந்த மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 2–3 என தென் ஆப்ரிக்காவிடம் இழந்தது. இதன்பின், உள்ளூரில் தொடர்ந்து நடந்த 6 தொடரையும் இந்தியா கைப்பற்றியது. தற்போதுதான் ஒரு நாள் தொடரை சொந்த மண்ணில் இழந்துள்ளது.

* ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை கடந்த 2017ல் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரை 4–1 என வென்றது. இதன்பின், தொடர்ந்து நடந்த 6 தொடரையும் கோட்டைவிட்டது. நேற்றுதான் முதல் முறையாக ஒரு நாள் தொடரில் கோப்பை கைப்பற்றி உள்ளது.

சோகத்தில் கோஹ்லி

விராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இழப்பது இதுவே முதல் முறை. ஒரு நாள் அரங்கில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ‘ஹாட்ரிக்’ தோல்வியை முதல் முறையாக சந்தித்துள்ளது.

383

இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அதிக ரன் சேர்த்த வெளிநாட்டு வீரரானார் (383 ரன்) கவாஜா. இதற்கு முன், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் 2015ல் நடந்த தொடரில் 358 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம். 

முதல் வீரர்

இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு எதிராக இரண்டு சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமை பெற்றார் கவாஜா.

ஏமாற்றிய குல்தீப்

இப்போட்டியில் 10 ஓவர் வீசிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் ஒரு விக்கெட் வீழ்த்தி 74 ரன்கள் விட்டுத்தந்தார். ஒரு நாள் அரங்கில், இவரின் இரண்டாவது மோசமான பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்துாரில் 2017ல் நடந்த போட்டியில் 75 ரன்கள் (2 விக்.,) விட்டுத்தந்திருந்தார்.

ரோகித் ‘8000’

இப்போட்டியில் 46 ரன்கள் எடுத்தபோது, இந்தியாவின் ரோகித் ஒரு நாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம், இந்த இலக்கை வேகமாக எட்டிய வீரர்கள் பட்டியலில் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலியுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 200 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்டனர். முதலிரண்டு இடங்களில் முறையே இந்திய கேப்டன் கோஹ்லி (175), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (182) உள்ளனர்.

கவாஜா அபாரம்

இத்தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில், 2 சதம், 2 அரைசதம் உட்பட 383 ரன்கள் எடுத்தார். அடுத்த நான்கு இடங்களை இந்தியாவின் விராத் கோஹ்லி (310 ரன்), ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (236), இந்தியாவின் ரோகித் சர்மா (202), ஷிகர் தவான் (177) கைப்பற்றினர்.

கம்மின்ஸ் கலக்கல்

அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 5 போட்டியில் 14 விக்கெட் கைப்பற்றினார். அடுத்த நான்கு இடங்களை ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா (11 விக்கெட்), இந்தியாவின் குல்தீப் யாதவ் (10), ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட்சன் (8), இந்தியாவின் பும்ரா (7) பிடித்தனர்.

இரண்டும் போச்சு

இம்முறை இரண்டு போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரை இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் பறிகொடுத்தது. இதனையடுத்து இரண்டு கோப்பைகளும்  ஆஸ்திரேலியா வசமானது.

* கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2–1 எனக் கைப்பற்றியது. இதற்கு, தற்போது இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை வென்று ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது.

 

 

 

 

 

மூலக்கதை