டெஸ்ட் போட்டியில் ‘பிரீ– ஹிட்’ | மார்ச் 13, 2019

தினமலர்  தினமலர்
டெஸ்ட் போட்டியில் ‘பிரீ– ஹிட்’ | மார்ச் 13, 2019

லண்டன்: டெஸ்ட் போட்டியில் ‘பிரீ– ஹிட்’, நேர கட்டுப்பாடு கொண்டு வரப்பட உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பை அதிகரிக்க மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் சார்பில் (எம்.சி.சி.,) உலக கிரிக்கெட் கமிட்டி சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. இக்குழு தலைவராக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் கேட்டிங் உள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் கங்குலியும் இதில் இடம்பெற்றுள்ளார்.

பரிந்துரை விபரம்:

* டெஸ்ட் போட்டியில் ‘ஸ்கோர் போர்டில்’ கடிகாரம் பொருத்தப்படும். ஒரு ஓவர் முடிந்தபின், உடனடியாக 80 நொடியிலிருந்து ஓடத்துவங்கும். ‘ஜீரோவை’ எட்டுவதற்குள், மற்றொரு பவுலர் ஓவரை வீச துவங்கி இருக்க வேண்டும். இதைப்போல, ‘பெவிலியனிலிருந்து’ களத்திற்கு வரும் பேட்ஸ்மேனுக்கும் (60 நொடி) கால இடைவெளி நிர்ணயிக்கப்படும். பீல்டிங் மாற்றுவது உள்ளிட்ட பல தருணங்களில் நேரம் பின்பற்றப்படுவது அவசியம். இதை கடைபிடிக்காத அணிக்கு முதலில் எச்சரிக்கை தரப்படும். தொடர்ந்து இப்படி செயல்பட்டால், அபராத ரன்கள் தரப்பட்டு, எதிரணியின் ‘ஸ்கோரில்’ சேர்க்கப்படும்.

* தற்போது டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்ப, எஸ்.ஜி, கூக்கபுரா போன்ற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குப்பதில், வரும் ஜூலையில் துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரே மாதிரியான பந்துகளை உபயோகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* ஒரு நாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் ‘நோ– பால்’ வீசினால் ‘பிரீ– ஹிட்’ தரப்படுகிறது. டெஸ்ட் போட்டியிலும் இதை பின்பற்ற உள்ளனர்.

* அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ்., முறையில் நேரம் வீணாக்கப்படுவது தடுக்கப்படும்.

இந்த பரிந்துரைகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், டெஸ்ட் போட்டியில் அமல்படுத்தப்படும்.

மூலக்கதை