பிஎன்பி பாரிபா ஓபன் நம்பர் 1 ஒசாகா அதிர்ச்சி தோல்வி: ஜோகோவிச்சும் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
பிஎன்பி பாரிபா ஓபன் நம்பர் 1 ஒசாகா அதிர்ச்சி தோல்வி: ஜோகோவிச்சும் வெளியேற்றம்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 4வது சுற்றில், சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் (23வது ரேங்க்) மோதிய ஒசாகா 3-6, 1-6 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் 2வது ரேங்க் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) 2-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ர்ய்சோவாவிடம் (61வது ரேங்க்) தோற்றார். தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள வீராங்கனைகளும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றிலேயே மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீராங்கனைகள் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா), கார்பினி முகுருசா (ஸ்பெயின்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா (செக்.) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் களமிறங்கிய நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செபியா) 4-6, 4-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரிடம் (39வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வி கண்டார். மற்றொரு 3வது சுற்றில் ஜப்பானின் கெய் நிஷிகோரி (6வது ரேங்க்) 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் ஹூபெர்ட் ஹர்காக்ஸிடம் (67வது ரேங்க்) போராடி தோற்றார். நட்சத்திர வீரர்கள் மரின் சிலிச் (குரோஷியா), டானில் மெட்வதேவ் (ரஷ்யா) ஆகியோரும் 3வது சுற்றில் தோற்று வெளியேறினர். சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சக வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் கைல் எட்மண்ட் (இங்கிலாந்து), ஜான் ஐஸ்னர் (அமெரிக்கா), ரபேல் நடால் (ஸ்பெயின்), கரென் கச்சனோவ் (ரஷ்யா) ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மூலக்கதை