ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியா-ஆஸ்திரேலியா டெல்லியில் மல்லுக்கட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியாஆஸ்திரேலியா டெல்லியில் மல்லுக்கட்டு

புதுடெல்லி: ஒருநாள் தொடரை கைப்பற்ற புதுடெல்லி பெரோஸா கோட்லா மைதானத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் இன்று மல்லுக்கட்டுகின்றன. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக இளம் வீரர் விஜய் ஷங்கர், 4வது வீரராக இன்று களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.   ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.

இரு அணிகளும் இத்தொடரில் தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரின் கடைசி போட்டி, இன்று புதுடெல்லி பெரோஸா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் வெற்றி பெற்றால், தொடர் வசமாகும் என்பதால் இரு அணிகளும் இன்று முனைப்புடன் களம் இறங்க உள்ளன.   மொகாலியில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை எட்டி, அற்புத வெற்றியை பெற்ற ஆஸ்திரேலிய அணி, அப்போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் இன்று களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போட்டியில் ஸ்டானிசுக்கு பதில், கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்ட ஆஷ்டன் டர்னர், 43 பந்துகளில் 84 ரன்களை குவித்து, இந்திய பவுலிங்கை சிதறடித்து, அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.



இந்திய அணியில் இன்று ஆடவுள்ள 11 வீரர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொகாலியில் ஷிகர் தவான் 143 ரன்களை குவித்து, ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

அவருக்கு இது சொந்த மைதானம் என்பதால் இப்போட்டியிலும் அவர் பிரகாசிப்பார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.   உலகக்கோப்பை போட்டிகள் துவங்க உள்ள நிலையில் இந்திய அணியின் 4வது வீரர் இடம் இன்னும் செட்டாகவில்லை என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. 3வது வீரராக இறங்கி தொடர்ந்து ரன்களை குவித்து வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, மொகாலியில் பரிசோதனை முயற்சியாக 4வது வீரராக ஆட வந்தார்.

ஆனால் அவர் 7 ரன்களில் ஆட்டமிழந்து விட்டார். அதே நேரம் 3வது வீரராக கோஹ்லி இடத்தில் இறக்கப்பட்ட லோகேஷ் ராகுலும் சொதப்பி விட்டார்.

அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு இதுவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  

இந்நிலையில் இன்றைய போட்டியில் 4வது வீரராக தமிழக வீரர் விஜய் ஷங்கரை களமிறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.   தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில் எல்லாம் பொறுப்பாக ஆடி, பிரகாசித்து வரும் விஜய் ஷங்கர், 4வது வீரராக இறங்கியும் சாதிப்பார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா சாதித்தது
இந்திய அணி சொந்த மண்ணில் இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க அணியிடம் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

அதன் பின்னர் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை பறி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-2 என ஆஸி.

அணி பின் தங்கியிருந்தது. தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வென்றதால் தொடர் இப்போது 2-2 என சமநிலையை எட்டியுள்ளது.

2 போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர், 5 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாப்பிரிக்கா 2 முறை  (இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக)  கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் (இந்தியாவுக்கு எதிராக) மற்றும் வங்கதேசம் (ஜிம்பாப்வே அணிக்கு எதிராக) இதே போல் 2 தோல்விகளுக்கு பின்னர், தொடரை கைப்பற்றி சாதித்துள்ளன.

உலகக்கோப்பைக்கு ரிகர்சல்?
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரும் மே மாதம் 30ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி, ஆடும் கடைசி ஒருநாள் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பையை வெல்ல உள்ள வலுவான அணிகள் என்ற பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் இப்போட்டி உலகக்கோப்பை பைனலுக்கு ரிகர்சல் என்றே, கிரிக்கெட் வல்லுநர்களால் கூறப்படுகிறது.

8 ஆயிரத்தை நோக்கி ரோஹித்
ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு, இந்திய அணியின் ஓபனர் ரோஹித் ஷர்மாவுக்கு இன்னும் 46 ரன்கள் தேவை.

இப்போட்டியில் அவர் இந்த இலக்கை தொட்டால், 8,000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் விரைவாக எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் விராட் கோஹ்லியும் (175 இன்னிங்சுகளில் 8,000 ரன்கள்), 2ம் இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்சும் (182 இன்னிங்சுகளில் 8,000), 3ம் இடத்தில் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் (200 இன்னிங்சுகளில் 8,000) உள்ளனர்.

இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா 8,000 ரன்களை கடந்தால், சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை