கான் அக்காடமியின் தமிழ் இணையத்தளம் துவக்கவிழா, வெற்றிவேல் அறக்கட்டளையின் சாதனை..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கலிஃபோர்னியாவில் Mountain View நகரில், திரு.சல்மான் கான் அவர்களின் மூலம் 2005-இல் சிறு அளவில் இணைய வழி பயிற்றுவிக்கும் வகுப்புகள் துவங்கப்பட்டன. அதன் பயன்பாடு அதிகரித்ததன் விளைவு, அனைத்து காணொளிகளையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து, அனைவரும் காணும் வகையில் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார். பிறகு மாணவர்களும் பங்கேற்று கற்றுக் கொள்ளும் வகையில் பல பயிற்சிகளை இணைக்க ஆரம்பித்தார். மேலும், இந்த பயிற்றுவிக்கும் முறை எளிதாகவும், மிகப் பயனுள்ளதாகவும் இருந்ததால், காணொளிகள் அனைத்தையும், ஸ்பானியம், போர்ச்சுகீசியம், ஹீப்ரு, இத்தாலியன் போன்ற உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்க ஆரம்பித்தனர். கான் அக்காடமியில் தற்பொழுது கணிதம், அறிவியல், கணிப்பொறியியல், வரலாறு மற்றும் பொருளாதாரம் போன்ற பல பாடங்களை தரமான காணொளிகளின் மூலம் கற்றுக் கொடுத்து வருகின்றனர். இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் உலகத் தரம் வாய்ந்த கல்வி ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். பில் கேட்ஸ் கூட தனது குழந்தைகள் கான் அக்காடமி வீடியோக்கள் மூலம் நிறைய படிக்கிறார்கள் என்று கூறியது குறிப்பிட தக்கது.

அன்ன சத்திரமும், ஆலயமும் கட்டுவதைவிடச் சிறந்தது "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்றான் மகாகவி பாரதி! ஆம், பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான கல்வி என்பது பிறப்புரிமை என்ற அடிப்படையில் துவங்கியது வெற்றிவேல் அறக்கட்டளையின் பயணம். ஏழைக் குழந்தைகளுக்கு அவ்வப்போது சிறு சிறு நிலையில் பல உதவிகள் செய்துவந்தது வெற்றிவேல் அறக்கட்டளை. பின்னர் கான் அக்காடமியின் இணைய வழிக் கல்வி முறைகளையும், காணொளிகள் பற்றியும் அறிந்து கொண்டு, அதனை தமிழ் மொழியில்மொழி பெயர்க்கலாம் என்ற முடிவிற்கு வந்தனர். ஆக, உலகத் தரத்தில் தமிழ்வழிக்கல்வி என்ற முழக்கத்தோடு முழு வீச்சில் செயல்பட ஆரம்பித்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு கான் அக்காடமியின் காணொளிகளை தமிழில் மொழியாக்கம் செய்வதற்கான அனுமதி பெற்றனர். கலிஃபோர்னியாவில் தன்னார்வலர்களின் மூலம் துவங்கிய மொழியாக்கம் செய்யும் பணி, தமிழக அரசின் தமிழ் இணைய பல்கலைக்கழகம் மூலம் வேகம் பெற்று, பின்னர் சென்னையில் தனிக்குழு அமைத்ததன் மூலம் இரண்டாயிரத்திற்கும் மேல் காணொளிகளை மொழியாக்கம் செய்து முடித்தனர்.

வெற்றிவேல் அறக்கட்டளையின் சீரிய முயற்சியாலும், பல தன்னார்வலர்களின் இடைவிடாத உதவியாலும், கான் அக்காடமியின் தமிழ் இணையத்தளம் இனிதே துவங்கவுள்ளது.வருகின்ற மார்ச் மாதம் 16-ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் சன்னிவேல் நகர சமூக மையத்தில் ”கான் அக்காடமியின் தமிழ் இணையத்தளம் துவக்க விழா” மற்றும்”தன்னார்வலர்கள் மற்றும் புரவலர்கள் பாராட்டு விழா” நடைபெறவுள்ளது. சன்னிவேல் நகர சமூக மையத்தின் ஆர்ச்சர்டு வளாகத்தில் (Orchard Pavilion, Sunnyvale Community Center, 550 E Remington Dr, Sunnyvale, CA 94087), ஆஸ்கார் விருது பெற்ற ”தமிழர் திரு.கொட்டலாங்கோ லியோன்” மற்றும் ஃப்ரீமாண்டு நகர உப தலைவர் ”திரு.ராஜ் சல்வான்” அவர்கள் முன்னிலையில் இவ்விழா நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது வெற்றிவேல் அறக்கட்டளை. மேலும், வளைகுடாப் பகுதியின் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறது.

மூலக்கதை