பைனலில் மகாராஷ்டிரா– கர்நாடகா | மார்ச் 12, 2019

தினமலர்  தினமலர்
பைனலில் மகாராஷ்டிரா– கர்நாடகா | மார்ச் 12, 2019

இந்துார்: சையது முஷ்தாக் அலி டிராபி தொடரின் பைனலில் மகாராஷ்டிரா, கர்நாடகா அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதன் ‘சூப்பர் லீக்’ சுற்றில் ‘ஏ,பி’ என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் மோதின. இந்துாரில் நடந்த ‘பி’ பிரிவு போட்டியில் விதர்பா, கர்நாடகா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கர்நாடகா அணி பவுலிங் தேர்வு செய்தது.

விதர்பா அணிக்கு உமேஷ் யாதவ், ஜிதேஷ் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கணேஷ் சதிஷ் ஒரு ரன் மட்டும் எடுத்தார். அபூர்வ் வான்கடே அரை சதம் கடந்தார். விதர்பா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அபூர்வ் வான்கடே (56), ஸ்ரீகாந்த் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

மணிஷ் பாண்டே அசத்தல்

கர்நாடகா அணிக்கு ரவி சரத் (5), மயங்க் அகர்வால் (13) விரைவில் ஆட்டமிழந்தனர். உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ கருண் நாயர் (24) அவுட்டானார். கேப்டன் மணிஷ் பாண்டே கைகொடுக்க, கர்நாடகா அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மணிஷ் பாண்டே (49), சுசித் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

* இந்துாரில் நடந்த மற்றொரு ‘ஏ’ பிரிவு போட்டியில் மகாராஷ்டிரா அணி (177/5) 21 ரன்கள் வித்தியாசத்தில் ரயில்வேஸ் (156) அணியை தோற்கடித்தது.

இதனையடுத்து, இரு பிரிவிலும் முதல் இடம் பிடித்த அணிகளான மகாராஷ்டிரா, கர்நாடகா அணிகள் தலா 12 புள்ளியுடன் பைனலுக்கு (மார்ச் 14, இந்துார்) முன்னேறின.

 

மூலக்கதை