லோகேஷ் ராகுல் முன்னேற்றம்: ‘டுவென்டி–20’ தரவரிசை வெளியீடு | மார்ச் 12, 2019

தினமலர்  தினமலர்
லோகேஷ் ராகுல் முன்னேற்றம்: ‘டுவென்டி–20’ தரவரிசை வெளியீடு | மார்ச் 12, 2019

துபாய்: ஐ.சி.சி., வெளியிட்ட ‘டுவென்டி–20’ போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஒரு இடம் முன்னேறி 5வது இடம் பிடித்தார்.

கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை (‘ரேங்கிங்’) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஒரு இடம் முன்னேறி 5வது இடம் பிடித்தார். இந்திய வீரர் அடிப்படையில், ‘டாப்–10’ தரவரிசையில் இவர் மட்டும்தான் இடம்பிடித்துள்ளார். இந்திய கேப்டன் கோஹ்லி 17வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் முறையே பாகிஸ்தானின் பாபர் அசாம் (885 புள்ளி), நியூசிலாந்தின் முன்ரோ (825), ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (815) வகிக்கின்றனர்.

பவுலர்கள் பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (699 புள்ளி) ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடத்தை பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் இவர் இடம் பெறாத காரணத்தால் சரிவை சந்தித்துள்ளார். சக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 16வது இடம் வகிக்கிறார். முதலிரண்டு இடங்களில் முறையே ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், பாகிஸ்தானின் ஷாதப் கான் உள்ளனர். இங்கிலாந்தின் ரஷித் மூன்றாவது இடம் வகிக்கிறார்.

‘ஆல் ரவுண்டர்’ பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (390 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், ஆப்கானிஸ்தானின் முகமது நபி முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

 

மூலக்கதை