அடுத்தடுத்த தோல்விகள்... அணியில் ஏராளமான பிரச்னைகள்... உலக கோப்பையை வெல்லுமா இந்தியா?: எதிரணி பலம், வீரர்கள் தேர்வு குறித்து குழப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடுத்தடுத்த தோல்விகள்... அணியில் ஏராளமான பிரச்னைகள்... உலக கோப்பையை வெல்லுமா இந்தியா?: எதிரணி பலம், வீரர்கள் தேர்வு குறித்து குழப்பம்

மும்பை: அடுத்தடுத்த தோல்விகள், அணியில் ஏராளமான பிரச்னைகள் உள்ளதால், உலக கோப்பையை இந்திய அணி வெல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், எதிரணி பலம், ஆடுகளம், வீரர்கள் தேர்வு, தலையீடுகள்  போன்ற காரணங்களால் அணி நிர்வாகம் குழம்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2015ம் அணி உலககோப்பைக்குப் பிறகு நான்கு ஒருநாள் தொடர்களை மட்டுமே இந்தியா இழந்துள்ளது. ஆனால், அந்த இழப்புகளின் பட்டியலில், 2015ல் வங்கதேச மண்ணில் 1-2 என தோற்றது.

ெதாடர்ந்து 2015ம் ஆண்டின்  இறுதியில் தென் ஆப்ரிக்காவிடம் 2-3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்தியா. கடந்த 2016ல் ஆஸ்திரேலிய மண்ணில் 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

அதன் பின்னர் கடந்தாண்டு இங்கிலாந்தில் 1 -2 என தொடரை இழந்தது. இதற்கிடையில் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடம் இறுதிப்போட்டியில் தோற்றது.

ஆனால், இந்திய அணி சில குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை அவற்றின் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

கடந்த 2017ம் ஆண்டு இலங்கையை அதன் சொந்த  மண்ணில் 5-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. கடந்த 2017 - 18ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது 4 - 1 என்ற கணக்கில் வென்றது.

அதேபோல், தென் ஆப்பிரிக்காவுக்கு  சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, அங்கே 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் 2-1 என தொடரை கைப்பற்றியது.



நியூசிலாந்து மண்ணில் ‘கிவி’ படையை 4-1 என  கணக்கில் வென்றது. ஆனால் இந்தியா கடைசியாக விளையாடிய 9 சர்வதேச போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றுள்ளது.

நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை 2-1 என இழந்தது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் 0-2 என டி20 தொடரை  இழந்தது.

தற்போது ஒருநாள் போட்டியிலும் அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. அதனால், இந்திய அணி உண்மையில் பலமாக உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.   இந்நிலையில், வரும் ஜூன்,  ஜூலையில் நடக்கும் உலக கோப்பைத் தொடரில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை ஜூன் 5ம் தேதி இந்திய அணி எதிர்கொள்கிறது.

அதற்கு முன்னதாக இந்தியா விளையாடும் சர்வதேச போட்டி தற்ேபாது நடைபெற்று  வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிதான். இந்த போட்டியில் இரு அணிகளும் சமபலத்தில் உள்ள நிலையில், சொந்த மண்ணில் இந்தியா வெல்லுமா அல்லது ஆஸ்திரேலிய அணி சாதிக்குமா என்பது வரும்  நாட்களில் தெரிந்துவிடும்.   ஏற்கனவே டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்ட நிலையில், ஒருநாள் தொடரையும் வெல்வதன் மூலம் இழந்த பார்மை மீட்டு புத்துணர்வுடன் உலக கோப்பையை எதிர்கொள்ளத் தயாராக திட்டமிட்டு விளையாடி  வருகிறது.

தொடர் தோல்விகளில் இருந்து மீள இந்தியாவுக்கும் டெல்லியில் நடக்கவுள்ள ஒருநாள் போட்டி மிக முக்கியமானது. அதனால், கடைசியாக இந்தியா விளையாடிய சில சர்வதேச போட்டிகள், அந்த அணியிடம்  என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது தெளிவாகி வருகிறது.



இந்திய அணியின் தரப்பில் விராட் கோலி, பும்ரா ஆகிய வீரர்களைத் தவிர வேறு எந்த வீரரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பாதி கேப்டனாக செயல்படும் தோனி, ஒருநாள் போட்டிகளில் விக்கெட்  கீப்பிங்கில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரர்களாக களம் இறக்கப்படுபவர்கள், கடந்த  ஆட்டங்களில் சோபிக்கவில்லை என்றே கூறமுடியும்.

கடைசி போட்டியில் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியது இந்திய அணிக்கு சற்று ஆறுதலாக உள்ளது. பலமற்ற மற்றும் நிலையற்ற நடுவரிசை கொண்ட இந்திய  அணி, உலக கோப்பை நெடுந்தொடரில் எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்கும் என்பது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பி உள்ளது.

நிலையான அணியில் யார்?
இந்திய அணியில் இதுவரை 11 பேர் கொண்ட நிலையான அணியை கட்டமைக்க முடியவில்லை.

மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைச் சேர்ப்பதா அல்லது ஒன்றிரண்டு பவுலிங் ஆல்ரவுண்டருடன் விளையாடுவதா, இரு சுழற்பந்து  வீச்சாளர்கள் அவசியமா என்பதையும் உறுதி செய்ய முடியாமல் குழம்பி உள்ளது. மேலும், ஐந்து அல்லது ஆறாவது நிலையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு பின்னர் களம் காணக்கூடியவர்கள் அதிரடியாக பேட்டிங்  செய்வதில்லை.

அவர்கள் உறுதியாக நிலையான ஆட்டத்தையும் வெளிப்படுத்துவதில்லை என்பதை கடந்த சில போட்டிகள் அடையாளம் காட்டுகின்றன. தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், கே. எல். ராகுல், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், அம்பதி ராயுடு போன்ற வீரர்கள் இந்திய அணியில் உள்ளே - வெளியே ஆட்டத்தில்  நிலையற்ற நிலையில் உள்ளனர்.

அதனால், எதிரணி பலம், ஆடுகளம், யார் விளையாட வேண்டும் என்பதை தீர்மானித்தால், தலையீடுகளை தவிர்த்தல் போன்றவற்றை கவனித்து அணி நிர்வாகம் செயல்பட்டால் மட்டுமே, உலக  கோப்பையை வெல்வதற்கான அறிகுறி தென்பட வாய்ப்புள்ளது. இப்படியே தொடர்ந்தால் இந்திய அணி பலமாக உள்ளதா? அல்லது பலவீனமாக உள்ளதா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாது.


.

மூலக்கதை