சென்னை- கொல்லம் தினசரி ரயில் சேவை 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சென்னை கொல்லம் தினசரி ரயில் சேவை 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது!

சென்னை - கொல்லம் தினசரி ரயில் சேவை 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
செங்கோட்டை - புனலூர் மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010ம் ஆண்டு செங்கோட்டை வழியாக தமிழக -கேரள  ரயில் போக்குவரத்தை  ரயில்வே துறை நிறுத்தியது.  49.3 கிமீ தூரமுள்ள இந்த அகல ரயில் பாதை பணிகள் ரூ.456  கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன்  9-ம் தேதி இந்த ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 8 மாத காலமாக செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு, வாரத்திற்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே இவ்வழியாக இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து கொல்லத்திற்கு செங்கோட்டை வழியாக மீண்டும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு செங்கோட்டை வந்த இந்த ரயிலை பொதுமக்களும் பயணிகளும், வியாபாரிகளும், வர்த்தக சங்கத்தினரும் வரவேற்றனர். செங்கோட்டையில் இருந்து 5.20க்கு புறப்பட்டு கொல்லத்துக்கு காலை 8.45 மணிக்கு சென்றது.

இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது.  இந்த ரயிலில் ஏசி வசதி கொண்ட பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8, பொது பெட்டிகள் 2 என மொத்தம் 12 பெட்டிகள் உள்ளன.

மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து 16102 என்ற எண்ணுடன் காலை 11.45 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு மாலை 3.10 மணிக்கு வந்த ரயிலுக்கு செங்கோட்டை வர்த்தக சங்கம் சார்பில்  வர்த்தக சங்கத் தலைவர் ரஹீம் ரயிலை இயக்கிய ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இந்த ரயில், ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

மூலக்கதை