138 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை! தென்னாபிரிக்கா அபார வெற்றி

PARIS TAMIL  PARIS TAMIL
138 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை! தென்னாபிரிக்கா அபார வெற்றி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 113 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
 
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் லசித் மலிங்க களத்தடுப்பை தெரிவு செய்தார்.
 
அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா சார்பாக குவின்டன் டி கொக் மற்றும் ரீசா ஹென்ரிக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்காக 91 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
 
ரீசா ஹென்ரிக்ஸ் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குவின்டன் டி கொக் 70 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்று தென் ஆபிரிக்க அணியை வலுப்படுத்தினார்.
 
அணித்தலைவர் டு பிலெசிஸ் 57 ஓட்டங்களைப் பெற்றதுடன் சர்வதேச ஒருநாள் அரங்கில் 5000 ஓட்டங்களைக் கடந்தார்.
 
தென்னாபிரிக்க அணி ஒரு கட்டத்தில் 36.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்களுடன் வலுவாக இருந்தாலும் எஞ்சிய 5 விக்கெட்களும் 31 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
 
அதன்படி, தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டம் 45.1 ஓவரில் 251 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
 
பந்து வீச்சில் திசர பெரேரா 3 விக்கெட்களையும் லசித் மாலிங்க, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
 
இதன் பின்னர் 252 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 32.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதனால் 113 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றிபெற்றது.
 
இலங்கை அணி சார்பாக ஒசாத பெர்னாண்டோ 31, குஷால் மெண்டில் 24 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் றபாடா 3 விக்கெட்களையும், தாஹிர், அரிச் நோர்ட்ஜெ மற்றும் இங்கிடி ஆகியோர் தல 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாபிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
 
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குவின்டன் டி கொக் தேர்வு செய்யப்பட்டார்.
 

மூலக்கதை