ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் முதல் போட்டியில் சிந்து-சங் ஜி ஹுவான் மோதல்: மற்றொரு போட்டியில் கில்மோரை எதிர்கொள்கிறார் சாய்னா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் முதல் போட்டியில் சிந்துசங் ஜி ஹுவான் மோதல்: மற்றொரு போட்டியில் கில்மோரை எதிர்கொள்கிறார் சாய்னா

பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று பர்மிங்ஹாமில் துவங்குகின்றன. இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து, தென் கொரியாவின் சங் ஜி ஹுவானுடன் மோதுகிறார்.

மற்றொரு போட்டியில் சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிரிஸ்டி கில்மோரை எதிர்கொள்கிறார். தென் கொரிய வீராங்கனை சங் ஜியுடன் இதுவரை 14 போட்டிகளில் ஆடியுள்ள சிந்து, அவற்றில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

சாய்னாவும்-கில்மோரும் இதுவரை 6 போட்டிகளில் மோதியுள்ளனர். ஆறிலுமே சாய்னா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிசுக்கு விம்பிள்டன் போல, பேட்மின்டனுக்கு ஆல் இந்தியா சாம்பியன்ஷிப் பட்டம் மதிப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக சென்றுள்ள கோபிசந்த், கடந்த 2001ம் ஆண்டு ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

அதன்பின்னர் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யாரும் இந்த பட்டத்தை வெல்லவில்லை.

மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து கடந்த ஆண்டு செமி பைனல் வரை முன்னேறினார்.

கடந்த 2015ம் ஆண்டு சாய்னா, பைனல் வரை முன்னேறி, நூலிழையில் கோப்பையை கோட்டை விட்டார். இந்த முறை ஆடவர் ஒற்றையர் ஆட்டங்களில் காந்த் கிடாம்பி, சாய் பிரணீத், பிரனாய் மற்றும் சமீர் வர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இரட்டையர் போட்டிகளில் மனு அட்ரி, பிஎஸ் ரெட்டி, மேக்னா ஜக்கம்புடி, பிஎஸ் ராம், அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி, பிரணவ் ஜெரி சோப்ரா  ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தரவரிசையில் முதல் 32 இடங்களில் உள்ள வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே இந்த போட்டிகளில் பங்கேற்க இயலும்.

இந்த சாம்பியன்ஷிப்பில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டிகள் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளன.


.

மூலக்கதை