ரொனால்டோவின் இடத்தை நிரப்ப முடியவில்லை: ரியல் மாட்ரிட் மிட்ஃபீல்டர் மோட்ரிக் தயக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரொனால்டோவின் இடத்தை நிரப்ப முடியவில்லை: ரியல் மாட்ரிட் மிட்ஃபீல்டர் மோட்ரிக் தயக்கம்

மாட்ரிட்: கிறிஸ்டியானோ ரொனால்டோ விட்டுச் சென்ற இடத்தை எங்கள் அணியின் ஃபார்வர்டு வீரர்களால் நிரப்ப முடியவில்லை என்று ரியல் மாட்ரிட் புட்பால் கிளப்பின் நட்சத்திர வீரர் லூகா மோட்ரிக் தெரிவித்துள்ளார். மாட்ரிட்டில் நடந்து வரும் ரியல் சாம்பியன்ஸ் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி இன்று அஜாக்ஸ் அணியை எதிர்கொள்கிறது.   இந்த போட்டிக்கு முன்னதாக ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரும், மிட்ஃபீல்டருமான குரோஷியாவை சேர்ந்த லூகா மோட்ரிக் கூறியதாவது: கடந்த வாரம் பார்சிலோனா அணிக்கு எதிரான போட்டியில் கைக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை எங்கள் அணியின் ஃபார்வர்டு வீரர்கள் நழுவ விட்டனர்.

எங்கள் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜுவென்ட்டஸ் கிளப்புக்கு மாறிச் சென்ற பின்னர், அவரது இடம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. அந்த இடத்தை எங்கள் கிளப்பின் ஃபார்வர்டு வீரர்கள் யாராலும் நிரப்ப முடியவில்லை என்பது உண்மை.



அவருக்கு மாற்றாக ஒரு வீரரை அந்த இடத்தில் சேர்ப்பது முடியாத ஒன்றாகவே உள்ளது. ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த சீசனில் அவர் 50க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.

அந்த எண்ணிக்கையில் இன்னொருவர் அடிக்கப் போவதில்லை. எனினும் முன்கள வீரர்கள் 3 பேர் தலா 10, 15 என கோல்களை அடித்தாலே போதுமானது.

அந்த அளவு திறமையான வீரர்கள் கூட தற்போது அணியில் இல்லை. இதுதான் அணியின் தற்போதைய பெரும் பிரச்னை.

உதாரணமாக பார்கா அணிக்கு எதிரான எங்களது ஆட்டத்தை பார்த்தாலே இது புரிந்திருக்கும். வினிசிஸ் ஜூனியரை மிகவும் நம்புகிறோம்.

ஆனால் அவருக்கு 18 வயதுதான் ஆகிறது. இந்த சீசனில் அவர் அணிக்காக 3 கோல்களை அடித்துள்ளார்.

அவரை தவிர மார்கோ அசென்சியோ, கரீம் பென்சேமா ஆகியோரும் நம்பிக்கைக்குரிய வகையில் ஆடி வருகிறார்கள். ஆனாலும் ரொனால்டோ, ரொனால்டோதான்.

அவருக்கு நிகர் இதுவரை இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் உலகின் முதல் நிலை வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து பெருந்தொகைக்கு, ஜுவென்டஸ் கிளப்புக்கு மாறியுள்ளார்.

கடந்த முறை மான்செஸ்டர் கிளப்பில் இருந்து ரியல் மாட்ரிட்டுக்கு மாறிய போதும், அவருக்கு கொடுக்கப்பட்ட தொகை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரியல் மாட்ரிட்டின் முன்களத் தாக்குதல், ரொனால்டோ இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

.

மூலக்கதை