தமிழ்ச் சொற்கள் குறித்த சந்தேகம் கேட்க கட்டணமில்லா தொலைபேசி அழைப்பகம்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தமிழ்மொழியின் சொல்வளத்தை ஒருங்கு திரட்டி நிரல்படுத்தும் ‘சொற்குவைத்’ திட்ட கட்டணமில்லா தொலைபேசி அழைப்பகம் முதலமைச்சரால் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழர் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராசன் தெரிவித்தார்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில், அகராதியியல் வல்லுனர் குழுக் கூட்டம், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளைச் சார்ந்த 40 அறிஞர்கள் பங்கேற்று ‘சொல்லாக்க உத்திகள்’ என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ததோடு, ‘சொற்குவைத்’ திட்டத்தைச் சிறப்பாகச் செயற்படுத்துவதற்கான தங்களது ஆலோசனைகளையும் வழங்கினர்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் தங்க. காமராசு வரவேற்றுப் பேசினார். 

இந்தக்கூட்டத்தில், அமைச்சர் க. பாண்டியராசன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

‘சொற்குவைத்’ திட்டம் என்பது தமிழில் உள்ள அனைத்துச் சொற்களையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், நிகரான சொற்களுக்குப் பொருள் விளக்கம் தேடும் வசதியை அமைத்துத் தருதல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், வந்த சொற்கள் திரும்பவும் வராமல் தடுத்தல், புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாக அமைய உள்ளது. 

‘சொற்குவைத்’ திட்டத்தின் ஒரு பகுதியாக செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில், 24 மணி நேரம் இயங்கும் கட்டணமில்லா அழைப்பு மையம் அமைக்கப்படும். அதில் தொடர்பு கொண்டு உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் யார் வேண்டுமானாலும் தமிழ்ச் சொற்கள் தொடர்பான ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற முடியும்.

‘சொற்குவைத்’ திட்டத்தின் மூலம், தமிழின் தனிப்பெரும் சொல்வளம் காக்கப்படும். தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும்.  தமிழ்ச் சொல்லாக்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் மதிப்பு வாய்ந்த 100 மொழிகள் பட்டியலில் 14–ம் இடத்தில் உள்ள தமிழை 10–ம் இடத்திற்கு மேலேற்றம் செய்வதற்குச் ‘சொற்குவைத்’ திட்டம் உறுதுணையாக இருக்கும்.
மேலும், இந்தச் ‘சொற்குவைத்’ திட்டத்தில் தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல், மாணவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும், பல துறைகளைச் சார்ந்த சொல்லாக்க அறிஞர்கள் கலந்து கொண்டு ‘சொற்குவைத்’ திட்டத்தின் செயலாக்கத்தைப் பற்றி பேசினார்கள்.

செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவர் தெ. ஞானசுந்தரம், மட்டைப் பந்தாட்ட வர்ணனையாளர் சி.மு. அப்துல் ஜபார், சொல்லியல் அறிஞர் கு. அரசேந்திரன், புதுவை, இணை பேராசிரியர் மு. இளங்கோவன், எழுத்தாளர் சா. கந்தசாமி,பத்திரிகையாளர் பா. கிருஷ்ணன், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் எம். குமரேசன், தமிழக அரசு நல்லாசிரியர் விருதாளர் இ. கோமதி நாயகம், சொல்லாக்க வல்லுநர், அருப்புக்கோட்டை பொன். சரவணன், குழந்தை மருத்துவர் நெய்வேலி ஆ. செந்தில், புதுவை, தமிழ்ப் பேராசிரியர் சிருங்கை சேதுபதி, மொழியாக்க வல்லுநர், தமிழ்ப் பேராசிரியர் சேதுமணி மணியன், கவிக்கோ ஞானச்செல்வன், தமிழ் மொழியியல் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், மொழிபெயர்ப்பு வல்லுநர் பா.கி. நடராசன், அகராதியியல் அறிஞர் வே. பதுமனார், மொழியாக்கச் செம்மல் கு. பாலசுப்பிரமணியன், மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன முனைவர் லோ.ரா. பிரேம் குமார், முனைவர் மதன் கார்க்கி, ஆய்வு அறிஞர் ப. மருதநாயகம், முனைவர் திருக்குறள் மோகனராசு, தமிழ்ப் பேராசிரியை இ. ரேணுகாதேவி, மூதறிஞர் வெற்றியழகன், திருச்சி பேராசிரியர் இ.சூசை, திருவாடனை அரசுக் கலைக்கல்லூரி பேராசிரியர் மு. பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவாக தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக அகராதியியல் துறைத் தலைவர் உல. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

மூலக்கதை