ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டில், 12 திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த திட்டங்களில் 14,071 கோடி ரூபாய் முதலீட்டில், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 12 திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்  சுமார் 10.5 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையிலும், 3 லட்சத்து 431 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டினை ஈர்க்கும் வகையிலும் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

உலகெங்கிலும் இருந்து சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு அரசு பிரதிநிதிகள், பன்னாட்டு தொழில் அதிபர்கள், பன்னாட்டு நிறுவன நிர்வாகிகள் எனப் பலர் பங்குபெற்ற இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாடு தொழில் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகவும், தொழில் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதற்கு சான்றாகவும் அமைந்தது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த திட்டங்களான ஹூண்டாய் நிறுவனம்  - காஞ்சிபுரம் மாவட்டம் - இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 7000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிதாக துவங்கப்பட உள்ள அந்த நிறுவனத்தின் மின் சக்தி பேட்டரி கார் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் கார் உற்பத்தி தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டம்; எம்ஆர் எப் நிறுவனம் பெரம்பலூர் மாவட்டம் - ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் 3100 கோடி ரூபாய் முதலீட்டில் 800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டயர் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

சுந்தரம் கிளேட்டன் குருப் - ஓசூர் மற்றும் ஒரகடம் ஆகிய இடங்களில் அமையவுள்ள 1200 கோடி ரூபாய் முதலீட்டில் 800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில் இரு சக்கர வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் விரிவாக்கத் திட்டம்; வீல்ஸ் இந்தியா லிமிடெட்  நிறுவனம் -திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்க்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் 600 கோடி ரூபாய் முதலீட்டில் 1800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில் புதிதாக துவங்கப்பட உள்ள அந்த நிறுவனத்தின் வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் திட்டம்; மன்டோ ஆட்டோமோட்டிவ் இந்தியா லிமிடெட் நிறுவனம் - காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் 844 கோடி ரூபாய் முதலீட்டில் 680 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிதாக துவங்கப்பட உள்ள வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

சால்காம்ப் மனிபெர்க்சரிங் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், நோக்யா டெலிகாம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் 5600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கைபேசி மின்னேற்றிகள் உற்பத்தி செய்யும் விரிவாக்கத் திட்டம், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் ( எல்எம்டபிள்யூ) நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 600 கோடி ரூபாய் முதலீட்டில் 230 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் துணிநூல் இயந்திரங்கள் உற்பத்தி ஆலையினை விரிவாக்கம் செய்யும் திட்டம் மற்றும் புதிதாக துவங்கப்பட உள்ள வானூர்தி மற்றும் பாதுகாப்பு தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் திட்டம்; ரூட்ஸ் இன்ஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 23 கோடி ரூபாய் முதலீட்டில் 305 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிதாக துவங்கப்பட உள்ள மருத்துவம், வானூர்தி, வாகனம் மற்றும் பிற பொறியியல் தொழில்களில் அதிநுட்ப பாகங்கள் தயாரிக்கும் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

ரூட்ஸ் மல்டிகிளீன் லிமிடெட் நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 45 கோடி ரூபாய் முதலீட்டில் 104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலைகள், நகர சாலைகள், விமான ஓடு பாதைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களை சுத்தம் செய்யும் அதிநவீன கருவிகளை உற்பத்தி செய்யும் திட்டம்; பியூர் கெமிக்கல்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் 20 கோடி ரூபாய் முதலீட்டில் 75 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிதாக துவங்கப்பட உள்ள சிறப்பு வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் திட்டம்; ஜெஎஸ் காஸ்ட் பவுண்ட்ரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் 39 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிதாக துவங்கப்பட உள்ள வாகன உற்பத்திக்கான வார்பட பாகங்களை உற்பத்தி செய்யும் திட்டம்; சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் 900 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உயர் கல்விக்கான தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கல்விக்கூடம் அமைக்கும் திட்டம் என மொத்தம் 14,071 கோடி ரூபாய் முதலீட்டில் 12,294 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கக் கூடிய 12 திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

மூலக்கதை