தமிழகத்தில் விடுமுறைக்கு பிறகு புதிய சாப்ட்வேருடன் ஆதார் சேவை மையங்கள் திறப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழகத்தில் விடுமுறைக்கு பிறகு புதிய சாப்ட்வேருடன் ஆதார் சேவை மையங்கள் திறப்பு!

தமிழகம் முழுவதும் ஒரு வார விடுமுறைக்கு பிறகு புதிய சாப்ட்வேருடன் ஆதார் சேவை மையங்கள் செயல்பாட்டுக்கு வந்தது. 

நாடு முழுவதும் தனிநபர் ஒவ்வொருவரும் ஆதார் அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் ஆதார் நிரந்தர  சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. 

இங்கு புதிய ஆதார் அட்டை வழங்கும் பணிகளும், ஆதார் அட்டையில், பிழை திருத்தும் பணிகளும் நடக்கிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஆதார் சேவை மையங்களில் உள்ள தனிநபர்களின் புதிய ஆதார் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்யும் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. 

இதற்காக ஒரு வாரம் ஆதார் மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.  விடுமுறை முடிந்து, அனைத்து மையங்களும் புதிய சாப்ட்வேருடன் செயல்பட தொடங்கி உள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 

புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்து புதிய தொழில்நுட்பத்தில் ஆதார் ஐடி இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கி, முடிவடைந்தது. இந்த புதிய சாப்ட்வேரின் முக்கிய அம்சங்களாக பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். அதுவும் ஒரு வயது வித்தியாசம் மட்டுமே மாற்ற இயலும்.

பெயர்ப் பிழை, திருத்தம் மற்றும் பெயர் திருத்தம், ஆண், பெண் பாலின திருத்தம் ஆகியவற்றை ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும். அதிக வயது வித்தியாசம் வருபவர்கள் பெங்களூரு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு வழிகாட்டுதல் படி திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 1947 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் www.uidai.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். 5 வயது ஆனவர்களுக்கு பிறந்த தேதியை மாற்ற கல்விச் சான்றிதழ் இல்லையெனில், அரசு பதிவு பெற்ற அலுவலரின் அட்டெஸ்டட் சான்றிதழை இணைக்க வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். 

மேலும் பேப்பரில் புகைப்படம் ஒட்டி அட்டெஸ்டட் செய்த சான்று ஏற்றுக் கொள்ள இயலாது. பொதுமக்கள் அனைத்து விவரங்களையும் ஆதார் பதிவு செய்யும் ஆபரேட்டரிடம் கேட்டு கொள்ள வேண்டும். 

தனி நபரின் ஆலோசனை பெற்று ஏமாற வேண்டாம். இந்தப் புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மூலக்கதை