தமிழும், தமிழ் நலனும் தன் வாழ்நாள் கடமையெனக் கொண்ட மனிதர் திரு.பழனிசாமி (டெக்சாஸ்) அவர்கள் மறைவுக்கு அஞ்சலி..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தோன்றின் புகழோடு தோன்றுக என்னும் குறளின் பொருள்படித் தமிழ்போற்றத் தமிழின் தலைமகனாக வாழ்ந்து, தன்னோடு இணைந்தவர்களையும் தமிழ்வழிப்படுத்திப் பல்வேறு சமுதாயப் பணிகள் மற்றும் தமிழ் அமைப்புகளில் பங்காற்றியவர். 

2001 ஆம் ஆண்டு டாலஸ் நகரத்தில் மனைவியுடனும், மூத்த மகளோடும் குடியேறியபின் 2003 ஆம் ஆண்டில் தான் பிறந்து வளர்ந்த மண்ணைப் போற்றும் வகையில் கொங்கு தமிழ்ப்பள்ளியை நண்பர்களோடு ஒன்றிணைந்து நிறுவி 16 ஆண்டுகளாக நடத்தி வந்தவர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக, சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நடத்தும் திருக்குறள் & தமிழ்த்திறன் போட்டிகளில் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தியவர். 

மேலும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளில் தமிழ் இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளில் தனக்கே உரிய சிறப்புத்தன்மையுடன் செயலாற்றியவர்.

2018 -ஆம் ஆண்டில் டாலஸில் நடைபெற்ற பேரவையின் கருத்துக்களத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பங்கேற்றுப் பல மாதங்களாகப் பணியாற்றிச் சிறப்புற நடத்தினர். குறள் தேனீப் போட்டியை ஒருங்கிணைத்து வழிநடத்தியதில் இன்றியமையாத பங்காற்றினார்.

தன்னலம் பாராது தமிழ்நலம் போற்றித் திகழ்ந்த உள்ளம் கொண்ட திரு. பழனிசாமி பச்சாக்கவுண்டர் பிப்ரவரி 22 ஆம் தியதி அன்று மாலை 4 மணியளவில் மாரடைப்பினால் இயற்கை எய்தினார்.

அன்பும், அறனும் உடைத்தாயின் சுற்றமும், நட்பும்  நீண்ட காலம் பண்போடும் நல்வழிப்பயனோடும் இணைந்து வாழ முடியும் எனக் கண்முன்னே வாழ்ந்து காட்டியவர்  மறைவு மிகப்பெரிய இழப்பு.

அன்னாரின் ஆன்மா இறையருளில் இளைப்பாறட்டும்.

அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் வலைத்தமிழ் ஆசிரியர் குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இந்த மிகப்பெரிய இழப்பிலிருந்து மீள அவரது குடும்பத்திற்கு உதவும் பொருட்டு நண்பர்களால் உருவாக்கப்பட்டுள்ள கீழ்காணும் உதவி இணைப்பில் உங்கள் உதவியை வழங்கலாம். 

Gofundme Link  for support:

https://bit.ly/2tDYx7L

 

மூலக்கதை