லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 91வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: போஹெமியன் ரஹப்ஸோடிக்கு 4 பிளாக் பாந்தருக்கு 3

தமிழ் முரசு  தமிழ் முரசு
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 91வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: போஹெமியன் ரஹப்ஸோடிக்கு 4 பிளாக் பாந்தருக்கு 3

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் திரைப்பட விருது விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது. இதில் அதிகபட்சமாக போஹெமியன் ரஹப்ஸோடி படம் 4 விருதுகளையும் பிளாக் பாந்தர் படம் 3 விருதுகளையும் வென்றுள்ளது. சர்வதேச அளவில் திரைப்பட கலைஞர்களுக்கான மெகா விருது, ஆஸ்கர்.

91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை  நடந்தது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்பட கலைஞர்கள் பங்கேற்றனர்.

இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானும் விழாவில் கலந்து  கொண்டார். 2018ம் ஆண்டுக்கான சிறந்த படைப்புகள், கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விவரம்:சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ரமி மாலிக் பெற்றார்.

‘போஹெமியன் ரஹப்ஸோடி’ என்ற ராணி பற்றிய வாழ்க்கை வரலாறு படத்தில் இவர் நடித்திருந்தார். விருது பெற்றது பற்றி ரமி மாலிக் கூறும்போது, ‘நான் சிறந்த  தேர்வாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும் இது ஒர்க்அவுட் ஆகும் என்று இந்த வேடத்தை ஏற்கும்போதே எண்ணினேன்’ என்றார்.

சிறந்த நடிகைக்கான விருதை தி ஃபேவரைட் படத்தில் நடித்த ஒலிவியா கால்மேன் பெற்றார்.   சிறந்த படத்துக்கான ஆஸ்கரை ‘கிரீன் புக்’  பெற்றது. மேலும் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இப்படம் பெற்றுள்ளது.மெக்ஸிகன் படமான ரோமா படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸோ குரோன் சிறந்த இயக்குனருக்கான விருது வென்றார். பிளாக் பாந்தர் படம் 3 ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றுள்ளது. சிறந்த ஆடை வடிமைப்புக்கான விருதை ரூத் கார்டர், புரொடக்‌ஷன் டிசைனக்கான விருதை ஹானா பீச்லர் மற்றும் ஜே ஹார்டு பெற்றதுடன் சிறந்த பின்னணி  இசைக்கான பிரிவிலும் விருது பெற்றிருக்கிறது.

சூப்பர் ஹீரோ கதை கொண்ட ஒரு படம் ஆஸ்கரில் இதுபோல் 3 விருதுகளை வெல்வது இதுவே முதல்முறை.
போஹெமியன் ரஹப்ஸோடி படம் அதிகபட்சமாக 4 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படத்தொகுப்பாளர் - ஜான் ஓட்மேன் ஜான் வார்ஹஸ்ட் மற்றும்  நினா ஹார்ட்ஸ்டோன். ஒலி கோர்ப்புக்காக பால் மேஸ்சி, டிம்  கேவஜின்,  ஜான் கேசலி.

ஒலி படத்தொகுப்புக்காக ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோன் ஆகியோர் விருதுகள் பெற்றனர். சிறந்த அனிமேஷன் படம் - ‘ஸ்பைடர் மேன் -  இன்டூ த ஸ்பைடர் வெர்ஸ்’. அனிமேஷன் குறும்படம் - பாவ், ஆவண குறும்படம்,  பீரியட்.

எண்ட் ஆப் சென்டன்ஸ், லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - ஸ்கின்.   விஷுவல்  எஃபெக்ட்ஸ் - ஃபர்ஸ்ட் மேன். ஒளிப்பதிவாளர் - அல்போன்சோ குவாரோன்  (ரோமா).

திரைக்கதை - நிக் வல்லலோங்கா, பிரெயன் கியூரி, பீட்டர் ஃபேரலி (கிரீன்  புக்)தழுவல் திரைக்கதை - சார்லி வச்டெல், டேவிட் ரேபினோவிட்ஸ், கெவின்  வில்மோட் மற்றும் ஸ்பைக் லீ (பிளாக்கிளான்ஸ்மேன்). பின்னணி இசை - லட்விக்  கோரன்சான் (பிளாக் பாந்தர்).

பாடல் - ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்), துணை நடிகர் - மஹர்ஷலா அலி (கிரீன் புக்). ஒப்பனை  - கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி (வைஸ்).

ஆடை  வடிவமைப்பு - ரூத் கார்டர் (பிளாக் பாந்தர்). தயாரிப்பு வடிவமைப்பு - ஹன்னா  பீச்லெர் (பிளாக் பாந்தர்).

சிறந்த துணை நடிகை  ரெஜினா கிங். இப் பெலெ ஸ்ட்ரீட் குட் டாக் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆவணப்படம்-  ஃப்ரீ சோலோ. சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்- வைஸ்.

சிறந்த ஆவண  குறும்படம் - பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்.

கோவை வாலிபரின் படத்துக்கு ஆஸ்கர்
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ் படத்திற்காக ரெய்கா செஹ்டாப்ச்சி, மெலிசா பெர்டான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பீரியட்  எண்ட் ஆப் சென்டன்ஸ் படம், இந்திய  கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் ஏழைப் பெண்கள் படும் அவஸ்தையை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கோவையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் உருவாக்கிய மலிவு விலை நாப்கினால் ஏழை பெண்கள்  பயன்பெற்றது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
அருணாச்சலம் முருகானந்தம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதியை பார்த்துவிட்டு குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

குறைந்த விலையில் நாப்கின் தயாரிப்பதை சேவையாக  செய்து வருகிறார். அவரின் வாழ்க்கை வரலாற்றை பேட்மேன் என்ற பெயரில் இந்தியிலும் படமாக உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வெளிநாட்டு படம் ரோமா
சிறந்த வெளிநாட்டு மொழி படமாக மெக்சிகோ நாட்டின் ‘ரோமா’ படம் தேர்வு செய்யப்பட்டது.

1970களில்,  நடுத்தர பணிப்பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது மெக்சின்  நாட்டிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட  8வது படம் ஆகும்.

விருதினை பெற்ற இயக்குனர் கியூரோன் பேசுகையில், ‘வெளிநாட்டு படங்களை அதிகம் விரும்பி பார்ப்பதோடு, சினிமாவை கற்றுக் கொண்டே வளர்ந்தேன். சிட்டிசன் கேன், ஜாஸ், ராஷ்மோன், தி காட்பாதர் மற்றும் ப்ரீத்லேஸ்  போன்ற திரைப்படங்கள் எனக்கு உத்வேகமாக இருந்தன’ என்றார். மேலும் இப்படம் கோல்டன் குளோப், கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான போஃப்டா விருதினையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லாமல் விழா
ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களின் பங்கு அதிகம்.

படங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பற்றி அவர்கள் வரிசைப்படுத்தி கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பெரும் பொறுப்பு அவர்களிடம் தரப்படும்.   ஆனால் இம்முறை தொகுப்பாளர் இல்லாமல் விழா நடந்துள்ளது. ஓரினச் சேர்க்கையாளர் தொடர்பாக கருத்து தெரிவித்ததன் காரணமாக விழா தொகுப்பாளராக நியமிக்கப்பட்ட கெவின் ஹார்ட் விலகினார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு  தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது விழா நடந்துள்ளது.

1989ம் ஆண்டு இதேபோல் தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விழா நடந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை