ஆப்கானிஸ்தான் உலக சாதனை * ‘டுவென்டி–20’ ல் அதிக ரன் குவித்தது | பெப்ரவரி 23, 2019

தினமலர்  தினமலர்
ஆப்கானிஸ்தான் உலக சாதனை * ‘டுவென்டி–20’ ல் அதிக ரன் குவித்தது | பெப்ரவரி 23, 2019

 டேராடூன்: ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ வரலாற்றில் அதிக ரன் எடுத்து புதிய உலக சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் அணி. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 278/3 ரன்கள் குவித்தது.

இந்தியா வந்துள்ள அயர்லாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள், ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ல் வென்ற ஆப்கானிஸ்தான் 1–0 என முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது போட்டி நேற்று டேராடூனில் நடந்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு உஸ்மான் கனி (73) உதவினார். ஹஸ்ரத்துல்லா 62 பந்தில் 162 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது புதிய உலக சாதனையாக அமைந்தது.

கடின இலக்கைத் துரத்திய அயர்லாந்து அணிக்கு கெவின் ஓ பிரையன் (37), கேப்டன் பால் ஸ்டெர்லிங் (91) கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற அயர்லாந்து அணி 20 ஓவரில் 194/6 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2–0 என கைப்பற்றியது. 

 

உலக சாதனைகள்...

ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ல் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன் இலங்கைக்கு எதிரான பல்லேகெலே (2016) போட்டியில் ஆஸ்திரேலியா 263/3 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. உள்ளூர் ‘டுவென்டி–20’ல் பெங்களூரு அணி (2013), புனே வாரியர்சிற்கு எதிராக 263/5 ரன்கள் எடுத்ததே அதிகம்.

* நேற்று ஹஸ்ரத்துல்லா, உஸ்மான் கனி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தனர். ‘டுவென்டி–20’ ல் எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது தான். தவிர சிறந்த ‘பார்ட்னர்ஷிப்’ ஆகவும் அமைந்தது.

* ஒரு ‘டுவென்டி–20’ போட்டியில் அதிக சிக்சர் அடிக்கப்பட்டது இப்போட்டியில் தான். இதில் ஹஸ்ரத்துல்லா (16) உட்பட ஆப்கானிஸ்தான் சார்பில் 22 சிக்சர் அடிக்கப்பட்டன. இதற்கு முன் விண்டீஸ் அணி 21 சிக்சர் (இந்தியா, 2016) அடித்து இருந்தது.

* ஒரே ‘டுவென்டி–20’ ல் அதிக சிக்சர் அடித்த வீரர் ஆனார் ஹஸ்ரத்துல்லா (16 சிக்சர்).

* சர்வதேச ‘டுவென்டி–20’ ல் ஒரு வீரர் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக 162 ரன் (ஹஸ்ரத்துல்லா) அமைந்தது. முதலிடத்தில் பின்ச் (ஆஸி., 172), மசகட்சா (ஜிம்பாப்வே, 172) உள்ளனர். 

* ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ ல் இது மூன்றாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக அமைந்தது. முதலிடத்தில் கெய்ல் (175, பெங்களூரு) உள்ளார்.

மூலக்கதை