உருவாகுமா விஜய் – கார்த்திக் கூட்டணி! * உலக கோப்பைக்கு இந்தியா ஆயத்தம் | பெப்ரவரி 23, 2019

தினமலர்  தினமலர்
உருவாகுமா விஜய் – கார்த்திக் கூட்டணி! * உலக கோப்பைக்கு இந்தியா ஆயத்தம் | பெப்ரவரி 23, 2019

   விசாகப்பட்டனம்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ‘டுவென்டி–20’ போட்டி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. இதில், இந்திய அணி சுலப வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இது உலக கோப்பைக்கான முன் இந்தியா பங்கேற்கும் கடைசி தொடர். இதனால், அணியில் மாற்றங்களை செய்து வெற்றிக் கூட்டணியை கண்டறிய முயற்சிக்கும். தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் முழு திறமை வெளிப்படுத்தினால், உலக கோப்பைக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளது.

விசாகப்பட்டனத்தில் நடக்கும் முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி, சொந்தமண் பலத்தில் உற்சாகமாக களமிறங்குகிறது. துவக்க வீரரகள் ரோகித் சர்மா, ஷிகர் தவானுக்கு ஓய்வு தரப்பட்டு லோகேஷ் ராகுல் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. மூன்று வார ஓய்வுக்கு பின் இந்திய  கேப்டன் கோஹ்லி அணிக்கு திரும்பியுள்ளார்.

கடந்த ஆண்டில் மூன்று வித போட்டிகளில் 2735 ரன்கள் (35 இன்னிங்ஸ்) குவித்த இவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ல் சராசரி 61 ரன் (13 போட்டி) வைத்துள்ளது சாதகமான விஷயம்.

‘மிடில் ஆர்டரில்’ ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்ட தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், திறமை காட்டும் பட்சத்தில் உலக கோப்பை தொடரில் இடம் பெறலாம்.  ஹர்திக் பாண்ட்யா விலகிய நிலையில் கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர் 5வது பவுலர் வாய்ப்பு பெற காத்திருக்கின்றனர்.

சீனியர்’ விக்கெட் கீப்பர் தோனி, அனுபவ ‘அட்வைஸ்’ இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். ரிஷாப் பன்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ‘ஆல்– ரவுண்டர்’ ஜடேஜாவுக்கு களமிறங்கும் அணியில் இடம் கிடைப்பது சந்தேகமே.

பும்ரா வருகை

கடந்த ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீண்டும் களம் காணுகிறார். இவருடன் சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ் களமிறங்குகின்றனர். சுழலில் சகால், குர்னால் பாண்ட்யா கூட்டணி சிறப்பாக செயல்படும் என நம்பலாம். அறிமுக வீரர் மயங்க் மார்க்கண்டே இடம் பெறுவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சவாலுக்கு ‘ரெடி’

ஆஸ்திரேலிய அணி தடை காரணமாக ‘சீனியர்’ ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இம்முறையும் இடம் பெறவில்லை. சமீபத்திய ‘பிக் பாஷ்’ தொடரில் கோப்பை வென்ற மகிழ்ச்சியில் கேப்டன் பின்ச் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் இந்தியா வந்துள்ளனர்.

இத்தொடரின் ‘நாயகன்’ ஷார்ட் (15 போட்டி, 637 ரன்) அணியில் இடம் பெற்றுள்ளார். அலெக்ஸ் கரே, ஷான் மார்ஷ், கவாஜா இருப்பது பலம் சேர்க்கிறது. மேக்ஸ்வெல் ‘பார்மிற்கு’ திரும்பினால் இந்தியாவுக்கு சவால் கொடுக்கலாம்.

பவுலிங்கில் நாதன் கூல்டர் நைல், ஸ்டாய்னிஸ், சுழலில் அனுபவ நாதன் லியான், இளம் ஆடம் ஜாம்பா தொல்லை தர காத்திருக்கின்றனர்.

 

11

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 19 ‘டுவென்டி–20’ போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 11ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. 6ல் ஆஸ்திரேலியா வென்றது. 2 போட்டிக்கு முடிவில்லை.

* சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 6 போட்டிகளில் 4ல் வென்ற இந்தியா 1 போட்டியில் தோற்றது. ஒரு போட்டி ரத்தானது.

 

48

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 40 ‘டுவென்டி–20’ போட்டிகளில் 48 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இன்று 2 விக்கெட் சாய்த்தார், இவ்வகை போட்டியில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் ஆகலாம். இதற்கு முன் அஷ்வின் 46 போட்டியில் 52 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

 

102

சர்வதேச ‘டுவென்டி–20’ல் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் இந்தியாவின் ரோகித் சர்மா (102) இரண்டாவதாக உள்ளார். இன்று 2 சிக்சர் அடித்தால் முதலிடத்தில் உள்ள கெய்ல் (விண்டீஸ், 103), கப்டிலை (நியூசி., 103) முந்தலாம்.

 

மீண்டும் வெல்லுமா

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 6 ‘டுவென்டி–20’ தொடரில் மோதின. இதில் இந்தியா 2007 (1–0), 2016 (3–0) என இரு முறை கோப்பை வென்றது. 2008ல் மட்டும் ஆஸ்திரேலியா (1–0) சாதித்தது. 

* 2012 (1–1), 2017 (1–1), 2018 (1–1) என மற்ற மூன்று தொடர்கள் ‘டிரா’ ஆகின. 

* சொந்த மண்ணில் நடந்த இரு தொடரில் இந்தியா ஒன்றில் (2007) வென்றது. ஒரு தொடர் (2017) ‘டிரா’ ஆனது. 

 

மீண்டும் ‘அடி’ 

கடந்த ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற 1–1 என தொடர் சமன் ஆனது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. 

* அடுத்து ஒருநாள் தொடரை 2–1 என இந்திய அணி கைப்பற்றியது. 

* பின் நடந்த டெஸ்ட் தொடரையும் 2–1 என வென்றது இந்தியா.

தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு நமது வீரர்கள் மீண்டும் ‘அடி’ கொடுப்பர் என எதிர்பார்க்கலாம்.

மூலக்கதை