மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் 1ம் தேதி முதல் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்

தினகரன்  தினகரன்
மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் 1ம் தேதி முதல் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்

புதுடெல்லி: டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி வரும் 1ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் அனில் பைஜாலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. மத்திய அரசின் தூண்டுதலினால்  எல்லா திட்டங்களுக்கும் கவர்னர் முட்டுக்கட்டை போடுவதாக மாநில அரசு குற்றஞ்சாட்டி வந்தது. மேலும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் அதிகாரப்பகிர்வு தொடர்பாக வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்ச  நீதிமன்றம், இரு தரப்புக்கும் இடையிலான அதிகாரங்கள் குறித்து உத்தரவு ஒன்றை வெளியிட்டது. ஆனால், அதன் பின்னரும் மோதல் போக்கு முடிவுக்கு வரவில்லை.இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி வரும் 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில்  நேற்று அவர் கூறுகையில், ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இங்கு அதிகாரம் இல்லை. இதனால் எங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை என் போராட்டம் தொடரும்’’ என்றார். ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் போராட்டம் நடத்தினர். தற்போது அந்த வரிசையில் மத்திய அரசின் அதிகாரப்போக்கை கண்டித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை