கடன் பாக்கியை வசூலிக்க மல்லையா லண்டன்சொத்து கணக்கெடுக்க வங்கிகள் தீவிரம்

தினகரன்  தினகரன்
கடன் பாக்கியை வசூலிக்க மல்லையா லண்டன்சொத்து கணக்கெடுக்க வங்கிகள் தீவிரம்

லண்டன்: வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து ரூ.10,000 கோடி அளவிலான  கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் 13 அரசு  வங்கிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இதற்காக லண்டனில் அவருக்கு உள்ள சொத்துகளை நீதிமன்றம் மூலம் அவை முடக்கியுள்ளன. அவ்வாறு முடக்கப்பட்ட சொத்துகளை கையகப்படுத்த முயன்றபோதுதான் புதிய  பிரச்னையை வங்கிகள் சந்தித்துள்ளன. அதாவது, மல்லையாவின் சொத்துக்கள் என்று கூறப்பட்டவையில் பல சொத்துகள் அவரின் பெயரில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.மல்லையாவுக்கு கடன்களை வாரிக் கொடுத்து சிக்கலில் தவிக்கும் அரசு வங்கிகள் ஒன்று சேர்ந்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளன.  இங்கிலாந்தில் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்கள்  என்று கூறி தங்களிடம் சமர்ப்பிக்க ஆவணங்களின்படி, அந்த சொத்துகளில் பல அவரின் பெயரில் இல்லை என்பதால், உண்மையில் அவருக்கு சொந்தமான சொத்துகள் எவை, மற்ற சொத்துகளில் அவருக்கு உள்ள பங்கு பற்றிய  விவரங்களை பெற்றுத்தருமாறு உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளன. இந்த சொத்துகளில் 3 உல்லாச படகுகள், பல சொகுசு கார்கள், தென்னாப்பிரிக்காவில் உள்ள மபுலா விளையாட்டு களம் ஆகியவையும் அடங்கும்.கடந்த 2018 மே 8ம் தேதி லண்டன் உயர்நீதிமன்றம், இங்கிலாந்து, வேல்ஸில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை (1.14 பில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங்) (ரூ.10,499 கோடி) மதிப்புடைய சொத்துக்களை முடக்க அனுமதி  அளித்தது. ஆனால், அவற்றை கையகப்படுத்த முயற்சிக்கும்போதுதான், பெரும்பாலான சொத்துக்கள் அவருடைய பெயரில்  இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவருடைய பெயரில் சில சொகுசு கார்களும் நகைகளும்தான்  உள்ளன. அவருடைய டிவின் எஸ்டேட் அவருடைய பிள்ளைகளின் பெயரிலும் லண்டனில் உள்ள சொகுசு பங்களா அவரது தாய் பெயரிலும் உள்ளன.சொத்துகள் பறிமுதல் தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில்  தான் லண்டனில் தங்கியிருக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய புதிய மனுவை மல்லையா நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. மல்லையாவின் புதிய மனு,  சொத்துக்கள் விவரம் சேகரிப்பில் தாமதம் போன்ற காரணங்களால் மல்லையாவின் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.லண்டனில் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதி கோரும் மல்லையாவின் மனு மீதான விசாரணை முதலில் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் வங்கிகளின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் லண்டன்  உயர்நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் ஹான்கூக் தெரிவித்துள்ளார். ஆனால், வழக்கு விசாரணை தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மூலக்கதை