நடுவுல கொஞ்ச தூரம் ஓடையை காணோமுங்க!

தினமலர்  தினமலர்
நடுவுல கொஞ்ச தூரம் ஓடையை காணோமுங்க!

கோவை:கோவை இஸ்கான் கோவிலுக்கு எதிரே, சங்கனுார் கிளை ஓடையில் கொஞ்ச துாரம் கட்டட கழிவுகளை கொட்டி, ஆக்கிரமித்துள்ளனர். அதிகாரிகள், கள ஆய்வு செய்து, ஓடையை மீட்க வேண்டும்.கோவை தண்ணீர் பந்தல் ரோடு, 'எஸ்' வளைவு சந்திப்பில் இருந்து, 'கொடிசியா' அரங்கிற்குச் செல்ல, குருசாமி நகரை பயன்படுத்த வேண்டும். இந்த ரோட்டின் ஒரு பகுதியில் சங்கனுார் பள்ளத்தின் கிளை ஓடை செல்கிறது.
இந்த ஓடை ஆக்கிரமிப்பாலும், அடைப்புகளாலும் சுருங்கியிருக்கிறது.இஸ்கான் கோவிலுக்கு எதிரே ஓடையை ஆக்கிரமித்து கட்டட கழிவு கொட்டி, சமப்படுத்தியுள்ளனர். ஆக்கிரமிப்புக்குள்ளான பகுதிக்கு இருபுறமும் ஓடையில் கழிவு நீர் தேங்கியிருக்கிறது. அருகாமையில் உள்ள கம்பெனிக்கு ஓடையை கடந்து செல்ல பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் அகலத்தை கணக்கில் கொண்டால், ஓடைக்கான அடையாளம் தெரியும்.தண்ணீர் பந்தல் 'எஸ்' வளைவில் துவங்கி, இஸ்கான் கோவில் வரை, சங்கனுார் ஓடையை துார்வாரி, ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகளை அகற்றினால், கழிவு நீரோ, மழை நீரோ தங்கு தடையின்றி செல்லும். ஆனால், மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
யார் பொறுப்பு?பொதுவாக நீர் நிலைகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும். மாநகரப் பகுதியில் உள்ள எட்டு குளங்கள் மற்றும் சங்கனுார் பள்ளம் பராமரிக்கும் பொறுப்பு மாநகராட்சி வசம் ஒப்படைத்திருப்பதால், பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்வதில்லை.மாநகராட்சி நிர்வாகமோ, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் குளங்களை மேம்படுத்த மட்டுமே திட்டமிட்டு வருகின்றனர். சங்கனுார் கிளை ஓடைகள் மீது அக்கறை கொள்வதில்லை. மாநகரப்பகுதியை கடந்து செல்லும் அனைத்து விதமான நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென்பதே, எதிர்பார்ப்பு.

மூலக்கதை