முதல் டி20 போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
முதல் டி20 போட்டியில் இந்தியாஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

விசாகப்பட்டிணம்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி, விசாகப்பட்டிணம் ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று விளையாடிய இந்திய  அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது. சொந்த மண்ணில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணி இந்தியா வந்துள்ளது. ஐசிசி உலக கோப்பைக்கு முன்பாக இரு அணிகளும் விளையாடும் கடைசி சர்வதேச  போட்டிகள், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. கேப்டன் கோஹ்லி, ஜஸ்பிரித் பூம்ரா இருவரும் சிறு ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் களமிறங்குவது இந்திய அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர், அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் இருவரும் சிறப்பாக விளையாடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்கும் உறுதியுடன் உள்ளனர். தினேஷ் கார்த்திக்கும் டி20 தொடரில் தனது முத்திரையை  பதிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறார். சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்குவது இந்திய வீரர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.அதே சமயம், பதிலடி கொடுக்க ஆஸி. வீரர்களும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. அந்த அணியில் பிக் பாஷ் டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய டார்சி ஷார்ட், கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, விஜய் ஷங்கர், யஜ்வேந்திர சாஹல்,  ஜஸ்பிரித் பூம்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயாங்க் மார்கண்டே.ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டார்சி ஷார்ட், பேட் கம்மின்ஸ், அலெக்ஸ் கேரி, ஜேசன் பெஹரன்டார்ப், நாதன் கோல்டர் நைல், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், கிளென் மேக்ஸ்வெல்,  ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸம்பா.* ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய டி20 போட்டிகளில் இந்தியா 11-6 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. * கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் இந்தியா 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. ஆஸி. அணி ஒரு வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது.* இது விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் 3வது டி20 போட்டியாகும்.* சர்வதேச டி20ல் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்க, ரோகித் ஷர்மாவுக்கு இன்னும் 2 சிக்சர்கள் மட்டுமே தேவை.

மூலக்கதை