அடிக்கல் நாட்டுவிழா!கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு.. பணிகள் விரைவில் துவங்க உள்ளது

தினமலர்  தினமலர்
அடிக்கல் நாட்டுவிழா!கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு.. பணிகள் விரைவில் துவங்க உள்ளது

- நமது நிருபர் -கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய திட்டத்திற்கு, முதல்வர், இ.பி.எஸ்., காணொலி காட்சி மூலம், அடிக்கல் நாட்டினார். இதனால், நிலைய கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கோயம்பேடில், வெளியூர் பஸ்களால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலுாரில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது.இதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, 80 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. ஆனால், இங்கு கற்காலத்தை சேர்ந்ததாக கருதப்படும், பாரம்பரிய சின்னங்கள் இருப்பதால், இப்பகுதியில் கட்டுமான திட்டங்களுக்கு, தொல்லியல் துறை தடை விதித்து இருந்தது.இதனால், புதிய பஸ் நிலையத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. தொல்லியல் துறை விதிப்படி, பாரம்பரிய சின்னம் இருப்பதாக கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து, முதல், 100 மீட்டர் வரையிலான பகுதியில், கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ள முடியாது.இதிலிருந்து அடுத்த, 200 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில், கட்டுமான பணிக்கு, தொல்லியல் துறை தடையின்மை சான்று பெறுவது கட்டாயம்.இதன் அடிப்படையில், பஸ் நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியில், 200 மீட்டர் வரம்புக்குள் வரும் இடத்தில், கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக, தடையின்மை சான்று கோரி, சி.எம்.டி.ஏ., மத்திய தொல்லியல் துறையிடம் விண்ணப்பித்தது.இதில், தேசிய பாரம்பரிய சின்னங்கள் ஆணையம், சில நிபந்தனைகள் அடிப்படையில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கு, தடையின்மை சான்று வழங்கியது.இது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:கிளாம்பாக்கத்தில், பாரம்பரிய சின்னம் இருக்கும் இடத்தில் இருந்து முதல், 100 மீட்டர் பகுதியை, பசுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்.அங்கு பொதுமக்களுக்கு, பாரம்பரிய சின்னம் குறித்த தகவல்கள் அளிக்கும் வகையில், வழிகாட்டி மையத்தை அமைக்க வேண்டும்.தொல்லியல் வல்லுனர்கள் மேற்பார்வையில், இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், 200 மீட்டர் வரம்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டு மானங்களின் உயரம், 34 மீட்டருக்குள் இருக்க வேண்டும்.இந்த நிபந்தனைகள் அடிப்படையில், புதிய பஸ் நிலைய பணிகளுக்கு, தேசிய பாரம்பரிய சின்னங்கள் ஆணையம், தடையின்மை சான்று அளித்துள்ளது. இவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகள் துவங்கப் பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய திட்டத்திற்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம், காணொலி காட்சி மூலம், அடிக்கல் நாட்டினார். இதனால், நிலைய கட்டுமான பணிகள், விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை