ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க கிரீன் சிக்னல்

தினமலர்  தினமலர்
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க கிரீன் சிக்னல்

கோவை:கவுண்டம்பாளையம், ஜீவா நகர் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க, கலெக்டர் அனுமதி அளித்து விட்டதால், போலீஸ் பாதுகாப்புடன் செல்ல, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.கோவை, கவுண்டம்பாளையத்தில் ஜீவா நகர் உள்ளது; வண்டிப்பாதையை ஆக்கிரமித்து, 203 வீடுகள் கட்டப்பட்டதால், 50 அடி ரோடு, 10 அடியாகசுருங்கியது.
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், 'மாற்று இடம் வழங்கி விட்டு, ஆக்கிரமிப்பை அகற்றலாம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் வழங்கியும், அப்பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. கோர்ட் உத்தரவுப்படி, மாற்று வீடு வழங்க, பயனாளிகள் பட்டியல் தயாரித்து, குடிசை மாற்று வாரியம் வசம் ஒப்படைத்தது.அத்துறையும், வீடு ஒதுக்கி, டோக்கன் வழங்கியது. 140 குடும்பத்தினர் வீடு ஒதுக்கி பெற்றனர்.
இருப்பினும், 26 பேரே, குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். இன்னொரு பிரிவினர், காலி செய்ய மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால், மேட்டுப்பாளையம் ரோட்டுக்கும், தடாகம் ரோட்டுக்கும் இணைப்பு சாலை கிடைக்கும்.முதல்கட்டமாக, காலி செய்யப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை இடிக்க நகரமைப்பு பிரிவினர் நேற்று சென்றனர். இடிக்கும் பணியை துவக்கியபோது, அப்பகுதியில் வசிப்போர், பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இத்தகவல், கலெக்டர் ராஜாமணிக்கு சென்றது. பணியை நிறுத்த உத்தரவிட்ட அவர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.உதவி நகரமைப்பு அலுவலர் விமலா சென்று, ஜீவா நகர் பிரச்னையை தெளிவாக எடுத்துக் கூறினார். ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவரத்தை கூறியதும், ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற அனுமதி அளித்தார். விரைவில் போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் முடிவு செய்திருக்கின்றனர்.

மூலக்கதை