பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்...ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல்

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்...ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. ரஜோரி மாவட்டம் நவ்ஷெரா மண்டலத்திற்கு உட்பட்ட காணம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் நேற்று இரவு திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் 150-க்கும் மேற்பட்ட பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் நேற்று அதிரடியாக குவிக்கப்பட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு, இதற்கு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அனைத்தையும் திரும்பப் பெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரிவினைவாத தலைவர்களை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  

மூலக்கதை