வயதை கூட்டிச் சொல்வேன்: காஜல் அகர்வால்

தினமலர்  தினமலர்
வயதை கூட்டிச் சொல்வேன்: காஜல் அகர்வால்

'ஒரு நாளும் நான் வயதைப் பற்றி கவலைப்பட்டதில்லை; வயதை கூடுதலாக சொல்வதன் மூலம், அனுபவம் கூட இருப்பதாக உணருகிறேன்' என, புது தத்துவம் சொல்லி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு ஜோடியான மகிழ்ச்சியில் இருக்கும் காஜல் அகர்வால், மேலும், இரு தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

எந்த துறையில் இருக்கும் பெண்களும், தனது வயதை கேட்டால் சொல்ல தயங்குவர். அதிலும், கதாநாயகிகளாக நடிப்பவர்கள் வயதை சொல்வதே இல்லை. ஆனால், நான் அப்படி இல்லை. எனது உண்மையான வயதை சொல்ல தயங்குவது இல்லை. நடிகைகள் திரையில், தங்களை குறைந்த வயது பெண்ணாக காட்டுவதற்கு படாதபாடுபடுகின்றனர்.

என்னிடம் வயதை கேட்டால் இன்னும் பத்து ஆண்டுகள் அதிகமாக சொல்ல, நான் ரெடி. காரணம், சினிமாவில் நிறைய அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது. வேறு எந்த துறையில் இருந்தாலும், இவ்வளவு அனுபவம் கிடைத்து இருக்காது.

திறமையான நடிகர்களுடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பை பெற்றேன். எத்தனையோ புதிய விஷயங்கள் தெரிய வந்துள்ளது. இப்போது நான் ரொம்ப முதிர்ச்சியாகி இருக்கிறேன். எந்த பிரச்னை வந்தாலும் அதற்கு என்னிடம் தீர்வு இருக்கிறது. யார் எந்த பிரச்னையை சொன்னாலும், யோசித்து முடிவு சொல்லி விடுகிறேன்.

பத்து ஆண்டு கால சினிமா வாழ்க்கை, முப்பது ஆண்டு அனுபவத்தை எனக்கு தேடி கொடுத்து உள்ளது. அதனால், வயது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.'' இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

மூலக்கதை