ஹைதராபாத் பகுதியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1,020 கிலோ கஞ்சா பறிமுதல்

தினகரன்  தினகரன்
ஹைதராபாத் பகுதியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1,020 கிலோ கஞ்சா பறிமுதல்

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகரின் ராஜேந்திரநகர் பகுதியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1,020 கிலோ கஞ்சா பொருளை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விசாக பட்டினத்தில் இருந்து நிலக்கரி துகள்களுக்குள் போதை பொருள் அடங்கிய மூட்டைகளை மறைத்து கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேந்திர நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது சந்தேகத்தின் பேரில், அங்கு வந்த லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து நிலக்கரி துகள்களை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றிய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,020 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததகாக கூறப்பட்டுள்ளது. அதேபோல, திருவண்ணாமலைக்கு கடத்தி சென்ற போதைப் பொருள் மற்றும் பணத்தை, மத்தூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி, அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 மூடைகளில் கடத்தி வரப்பட்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 4.90 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, தப்பியோடிய, இருவரை தேடி வருகின்றனர்.

மூலக்கதை