லோக்சபா தேர்தலில் உலகளவில் அதிக செலவு...சாதனை? அமெரிக்க அதிபர் தேர்தலை மிஞ்சும் என கணிப்பு

தினமலர்  தினமலர்
லோக்சபா தேர்தலில் உலகளவில் அதிக செலவு...சாதனை? அமெரிக்க அதிபர் தேர்தலை மிஞ்சும் என கணிப்பு


வாஷிங்டன்: இந்தியாவில், விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தல், சர்வதேச அளவில், ஜனநாயக நாடுகளில் நடக்கும் தேர்தல்களில், மிக அதிக செலவாகும் தேர்தலாக, கருதப்படுகிறது. 'அமெரிக்காவில், 2016ல் நடந்த அதிபர் தேர்தலை விட, இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்கு அதிக செலவாகும்' என, அமெரிக்காவை சேர்ந்த நிபுணர் கூறியுள்ளார்.லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஏப்ரல் - மே மாதங்களில், நாடு முழுவதும், 543 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.

ரூ35 ஆயிரம் கோடி



இந்த தேர்தல் குறித்து, அமெரிக்காவை சேர்ந்த, சர்வதேச ஆலோசக அமைப்பு நிபுணர், மிலன் வைஷ்ணவ், நிருபர்களிடம் கூறியுள்ளதாவது:இந்தியாவில், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த, 2016ல், அமெரிக்காவில், அதிபர் பதவிக்கும், பார்லிமென்டுக்கும் நடந்த தேர்தலில், 46 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது.இந்நிலையில், இந்தியாவில் இந்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில், அமெரிக்க தேர்தலை விட, மிக அதிகளவில் செலவிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தேர்தல், உலகஅளவில், ஜனநாயக நாடுகளில், இதுவரை நடந்த தேர்தல்களை விட, மிக அதிகளவு செலவான தேர்தல் என்ற சாதனையை நிச்சயம் படைக்கும்.கடந்த, 2014ல் நடந்த தேர்தலை போலன்றி, தற்போது நடக்கும் தேர்தலில், ஆளும், பா.ஜ.,வுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்துள்ள கருத்துக் கணிப்புகள் இதை உறுதி செய்கின்றன. எனவே, இந்த தேர்தலில் வெற்றி பெற, இரு தரப்பும், அதிகளவில் செலவழிக்கும்.வரும் லோக்சபா தேர்தலில், யாருக்கு வெற்றி என உறுதியாக கணிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. அதனால், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவுகள், கணிசமாக எகிறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நன்கொடை



இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை விஷயத்தில், வெளிப்படைத்தன்மை பூஜ்யமாக உள்ளது. இங்கு, கட்சிகளுக்கு அல்லது வேட்பாளர்களுக்கு, நன்கொடை அளிப்பவரை அடையாளம் காண்பது, முடியாத காரியம்.கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடை பற்றிய தகவலை, வெகு சிலரே வெளிப்படையாக தெரிவிக்கின்றனர்.தாங்கள் நன்கொடை அளித்த கட்சி ஆட்சிக்கு வராவிட்டால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில், நன்கொடை தகவல்களை வெளிப்படையாக கூறுவதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

இணையவழியில் ஓட்டு:



என்.ஆர்.ஐ.,க்களுக்கு மறுப்பு வரும் தேர்தலில், என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இணையவழியில் ஓட்டளிக்கலாம் என, சமீபத்தில் தகவல் வெளியானது.இதற்கு மறுப்பு தெரிவித்து, தேர்தல் கமிஷன் செய்தி தொடர்பாளர், டில்லியில் நேற்று கூறியதாவது:லோக்சபா தேர்தலில், என்.ஆர்.ஐ.,க்கள், இணையவழியில் ஓட்டளிக்கலாம் என வந்த செய்தி தவறு. அவ்வாறு ஓட்டளிக்க, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இத்தகைய சட்ட திருத்தம், இதுவரை செய்யப்படவில்லை.தற்போதுள்ள நடைமுறைப்படி, என்.ஆர்.ஐ.,க்கள், வாக்காளராக தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும்; பின், தேர்தலின்போது இந்தியாவுக்கு வந்து, சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு சென்று, தங்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை காண்பித்து, ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தேர்தல் கமிஷனுக்கு



சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' 'மின்னணு ஓட்டு இயந்திரத்தில் உள்ள, 'சோர்ஸ் கோட்' எனப்படும், ஆதார கட்டளையில் மாற்றம் செய்தால், அந்த இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும்' எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவை நேற்று பரிசீலித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இது குறித்து பதில் அளிக்கும்படி, தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

மூலக்கதை