2 மணி நேரத்தில் கடந்தார் 10 கிமீ பாத யாத்திரை சென்று ஏழுமலையானை தரிசித்த ராகுல்

தினகரன்  தினகரன்
2 மணி நேரத்தில் கடந்தார் 10 கிமீ பாத யாத்திரை சென்று ஏழுமலையானை தரிசித்த ராகுல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 கிமீ தூரம் பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்தார். இந்த தூரத்தை அவர் 2 மணி நேரத்தில் கடந்தார். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அனந்தப்பூர் மாவட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவர் ரகுவீரா ரெட்டி தலைமையில் தொடங்கிய பஸ் யாத்திரை நேற்று திருப்பதிக்கு வந்தது. இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி நேற்று காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். பின்னர் கார் மூலம் திருப்பதி அலிபிரிக்கு சென்ற அவர் அங்கிருந்து பாத யாத்திரையாக திருமலைக்கு சென்றார். 10 கிமீ தூர மலைப்பாதையை அவர் 2 மணி நேரத்தில் கடந்தார். மாலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ராகுல் காந்திக்கு ரங்கநாதர் மண்டபத்தில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ பிரசாதம் வழங்கினார். ராகுல் வருகையையொட்டி ஏழுமலையான் கோயிலில் நேற்று மதியம் 2.30 மணி முதல் 3.15 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. இதேபோல் வழக்கமாக 3 மணிக்கு தொடங்கும் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான தரிசனமும் நிறுத்தப்பட்டது.

மூலக்கதை