தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: சியோலில் மோடி அழைப்பு

தினகரன்  தினகரன்
தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: சியோலில் மோடி அழைப்பு

சியோல்: ‘‘உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும், தீவிரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தீவிரவாத தொடர்புகளை முற்றிலும் ஒழிக்க, உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என பிரதமர் மோடி கூறினார்.  தென்கொரியாவுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றார். தென்கொரிய அதிபரின் ‘ப்ளூ ஹவுஸ்-ல்’ அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் மூன் ஜேன், அவரது மனைவி ஜங்-சூக் ஆகியோரை மோடி சந்தித்து பேசினார். அதன்பின் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் வர்த்தகம், முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, கட்டமைப்பு மேம்பாடு, மீடியா, சர்வதேச குற்றங்களுக்கு எதிராக போராடுவது, ஸ்டார்ட்-அப் திட்டங்கள் போன்றவற்றில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் மூன்-ஜேனுக்கு நன்றி. எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் நாட்டின் வளர்ச்சி பணிகள் பாதிக்கின்றன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா தீவிரவாத பிரச்னையை சந்தித்து வருகிறது. இந்த அச்சுறுத்தல்களை தற்போது அனைத்து நாடுகளும் சந்தித்து வருகின்றன. உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும், தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக  அமைந்துள்ளது. தீவிரவாத தொடர்புகளை முற்றிலும் ஒழிக்க, மனிதநேயத்தில் நம்பிக்கையுள்ள உலக நாடுகள்  அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். கடந்த 1988ம் ஆண்டு நடந்த சியோல் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு சில மாதங்களுக்கு முன்புதான் அல்-கய்தா அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது அந்த அமைப்பு உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியாவும்-தென்கொரியாவும் உறுதியாக உள்ளன. இந்தியாவின் உள்துறை அமைச்சகம், தென்கொரியாவின் தேசிய போலீஸ் ஏஜென்சி இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேம்படுத்தும் என்றார்.மோடிக்கு சியோல் அமைதி விருதுகொரிய தீபகற்பம் மற்றும் உலகின் இதர பகுதிகளில் அமைதியை விரும்பும் கொரிய மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக ‘சியோல் அமைதி விருது ஏற்படுத்தப்பட்டது. தென்கொரியாவின் உயரிய விருதான இது, 1990ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் உட்பட பல தலைவர்களுக்கு இந்த விருது விழங்கப்பட்டுள்ளது. 14வது சியோல் அமைதி விருது பிரதமர் மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றி குறும்படமும் திரையிடப்பட்டது. ‘இந்தியா மற்றும் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பிரதமர் மோடி அளித்துள்ள பங்களிப்பு, பணக்காரர் மற்றும் ஏழை இடையே நிலவும் சமூக மற்றும் பொருளாதார வேறுபாட்டை மோடியின் பொருளாதார கொள்கைகள் குறைத்தது ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது’ என சியோல் அமைதி விருது குழுவினர் தெரிவித்தனர்.

மூலக்கதை