இந்திய பெண்கள் ‘சூப்பர்’ வெற்றி | பெப்ரவரி 22, 2019

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் ‘சூப்பர்’ வெற்றி | பெப்ரவரி 22, 2019

ஐ.சி.சி., சார்பில் பெண்கள் ஒருநாள் சாம்பியன்ஷிப் தொடர் (2017–2020) பல்வேறு நாடுகளில் நடக்கிறது. இதன் படி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் 2020 உலக கோப்பை தொடருக்கு (நியூசி.,) நேரடியாக முன்னேறும். 

இதன் ஒருபகுதியாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மும்பையில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. 

ஜெமிமா நம்பிக்கை

இந்திய அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. மந்தனா 24 ரன் எடுத்து திரும்பினார். அடுத்த தீப்தி சர்மா (7) ஏமாற்றினார். ஜெமிமா (48) அரைசத வாய்ப்பை இழந்தார். 

தியோல் (2), மோனா (0) ‘ஷாக்’ கொடுக்க, தானியா (25) ரன் அவுட்டானார். கேப்டன் மிதாலி ராஜ் 44 ரன் எடுத்தார். பின் வரிசையில் ஜூலன் கோஸ்வாமி (30) சற்று உதவினார். இந்திய அணி 49.4 ஓவரில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

24 ரன் 7 விக்.,

எளிய இலக்கைத் துவக்கிய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 111 ரன்னுக்கு 3 விக்கெட் என வலுவான நிலையில் இருந்தது. ஷிவர் (44) ரன் அவுட்டாக போட்டியில் திருப்பம் ஏற்பட்டது. அடுத்து வந்த யாரும் ஒற்றை இலக்கைத் தாண்டவில்லை. 

ஏக்தா பிஷ்ட் வீசிய 41வது ஓவரில் ஷ்ரப்சோல், எக்லஸ்டோன், ஹார்ட்லே என மூவரும் ‘டக்’ அவுட்டாகினர். கடைசி 24 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 41 ஓவரில் 136 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் ஹீதர் நைட் (39) அவுட்டாகாமல் இருந்தார். பிஷ்ட் 4 விக்கெட் சாய்த்தார். 

66 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி 25ம் தேதி மும்பையில் நடக்கிறது. 

மூலக்கதை