‘டுவென்டி–20’: ஆந்திரா உலக சாதனை | பெப்ரவரி 22, 2019

தினமலர்  தினமலர்
‘டுவென்டி–20’: ஆந்திரா உலக சாதனை | பெப்ரவரி 22, 2019

கிருஷ்ணா: சையது முஷ்தாக் அலி டிராபியில் அசத்திய ஆந்திர அணி, ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நகரில் நடந்த சையது முஷ்தாக் அலி டிராபி (‘டுவென்டி–20’) தொடருக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ஆந்திரா, நாகலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஆந்திரா அணிக்கு அஷ்வின் ஹெப்பர் (15) ஏமாற்றினார். கேப்டன் ஹனுமா விஹாரி (44) ஆறுதல் தந்தார். பொறுப்பாக ஆடிய கிரிநாத் ரெட்டி (62) அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய ரிக்கி புய், 38 பந்தில் சதமடித்து கைகொடுத்தார். ஆந்திர அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் குவித்தது. ரிக்கி புய் (108 ரன், 42 பந்து, 10 சிக்சர், 5 பவுண்டரி), ரவி தேஜா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை விரட்டிய நாகாலாந்து அணி, 13.1 ஓவரில் 65 ரன்னுக்கு சுருண்டு 179 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கேப்டன் ஜோனாதன் அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார். ஆந்திரா சார்பில் சசிகாந்த், எஸ்.கே. இஸ்மாயில், கரண் சர்மா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

புதிய சாதனை

நாகலாந்தை 179 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆந்திர அணி, ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன், 2007ல் ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த கென்யாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இலங்கை அணி 172 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது சாதனையாக இருந்தது.

மூலக்கதை