இளம் இந்தியா வெற்றி | பெப்ரவரி 22, 2019

தினமலர்  தினமலர்
இளம் இந்தியா வெற்றி | பெப்ரவரி 22, 2019

திருவனந்தபுரம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது யூத் டெஸ்டில் (19 வயது) அசத்திய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதலாவது யூத் டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 197, இந்தியா 330 ரன்கள் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 34 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணிக்கு போங்கா மகாக்கா (74) அரைசதம் கடந்து கைகொடுத்தார். பிரைஸ் பார்சன்ஸ் (16), லுாக் பியூபோர்ட் (11), மார்கோ ஜேன்சன் (6) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, 2வது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 167 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் மானவ் சுதார், ஷோகீன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

பின், 35 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு திவ்யான்ஷ் சக்சேனா (18), வருண் நயானர் (19*) கைகொடுத்தனர். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட யூத் டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணி 1–0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் திருவனந்தபுரத்தில் வரும் 26ல் துவங்குகிறது.

மூலக்கதை