மாற்றத்தை உறுதி செய்த ஜெய்

தினமலர்  தினமலர்
மாற்றத்தை உறுதி செய்த ஜெய்

அஜித் வழியில் படங்களின் புரமோஷனுக்கு வரமாட்டேன் என்பதை கொள்கையாக வைத்திருந்தார் ஜெய். அஜித்தைப் போலவே மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். சமீபத்தில் திடீரென மீடியாக்களை சந்தித்த ஜெய், தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டுவிட்டதாக தெரிவித்தார்.

அவருடைய நடிப்பில் உருவாகி வரும் படங்கள் 'நீயா-2', 'பார்ட்டி', மற்றும் 'கருப்பர் நகரம்' ஆகிய படங்கள் தயாராகி வரும் இந்த நேரத்தில் ஜெய்யின் மாற்றம் அவருக்கு பலனைக் கொடுக்கும் என்பது ஒருபக்கம் இருக்க, உண்மையிலேயே ஜெய் மாறிவிட்டாரா என்ற சந்தேகமும் இருந்தது.

இந்தநிலையில் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் 'பிரேக்கிங் நியூஸ்' என்ற படத்தின் பூஜை நேற்று காலை சென்னையில் நடந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக பானு நடிக்கிறார். கன்னட படங்களில் நடித்து பிரபலமான இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது. இவர்களுடன் தேவ்கில், 'வேதாளம்' படத்தில் வில்லனாக நடித்த ராகுல்தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகர், பழ கருப்பையா, ராதாரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு விஷால் பீட்டர் இசை அமைக்கிறர். ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை மகேஷ் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை 'ஸ்டன்னர்' சாம் அமைக்கிறார். 'ராகுல் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் கே.திருக்கடல் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

'பிரேக்கிங் நியூஸ்' படத்துவக்கவிழாவுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே ஆஜரான ஜெய், படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியதோடு அதன் மூலம் தன்னுடைய மாற்றத்தையும் உறுதிபடுத்தினார். ஜெய்யிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் அவருக்கு நல்ல பலனைக்கொடுக்கும் என்று நம்பலாம்.

மூலக்கதை