நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலை அடுத்து காஷ்மீர் மாணவர்கள் மீது பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தாலும் கூட மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நாடு முழுவதும் மறைமுகமாக நடைபெற்று வந்தது. குறிப்பாக உத்திரப்பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயில கூடிய காஷ்மீர் மாணவர்கள் மீது வலதுசாரி அமைப்புகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டார்கள். காஷ்மீர் மாணவர்கள் இந்த சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில்  தொடர்புடையதாக எழுந்த தகவலை அடுத்து நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் பயில் கூடிய காஷ்மீரி மாணவர்கள் உடனடியாக அந்தந்த மாநிலங்களை விட்டு வெளியேறி காஷ்மீர் மாநிலத்திற்கே சென்று விட வேண்டும் என்று கூறி காஷ்மீரி மாணவர்கள் மீது கடுமையான தாக்குதலை வலதுசாரி அமைப்புகள் நடத்தி கொண்டிருந்தனர். இது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பிரச்னையை எழுப்பி இருந்தது.இந்த சம்பவம் தொடர்பான தகவல் உள்துறை அமைச்சகம் வரை சென்றுள்ளதை தொடர்ந்து இதற்காக தனியாக அதிகாரிகளை நியமித்து காஷ்மீரி மாணவர்களை பாதுகாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருந்தது. இருந்தாலும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் எதிரொலித்தது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை அவசர வழக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எடுத்து விசாரித்தார். அப்பொழுது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன போன்ற பல்வேறு கேள்விகளை தலைமை வழக்கறிஞராக இருக்கக்கூடிய கேகே. வேணுகோபாலிடம் தலைமை நீதிபதி கேட்டறிந்தார். இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாணவர்களை தாக்குவது, தகாத வார்த்தைகளில் திட்டுவது, சமூக வலைத்தளங்களில் திட்டுவது, தனிமைப்படுத்துவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையையும் பார்த்து கொண்டு நீதிமன்றம் சும்மா இருக்காது என்றும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் உடனடியாக காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு 4 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை