ராணுவ தளவாட பொதுத்துறை நிறுவனங்கள் அன்னிய சந்தையை பிடிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
ராணுவ தளவாட பொதுத்துறை நிறுவனங்கள் அன்னிய சந்தையை பிடிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

பனாஜி: ‘‘ராணுவத் தளவடாங்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அன்னிய சந்தையில் போட்டி போட வேண்டும்’’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலோர காவல் படை உபயோகத்துக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட புதிய ரோந்து கப்பலை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வாஸ்கோவில் நேற்று நடந்தது. 105 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் 14 அதிகாரிகள், 133 மாலுமிகள் செல்ல முடியும். 2,350 டன் பொருட்களையும் இதில் கொண்டு செல்ல முடியும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: கோவா கப்பல் கட்டும் தளம் மட்டுமல்ல; ராணுவத் தளவாடங்களை தயாரிக்கும் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும், தங்கள் தயாரிப்புகளை சர்வதேச தரத்துக்கு தயாரிக்க வேண்டும். இந்திய ராணுவத்துக்கும் மட்டும் தங்கள் தயாரிப்புகளை விற்காமல், அன்னிய சந்தையிலும் உங்கள் தயாரிப்புகளை விற்க போட்டி போட வேண்டும். ரோந்து கப்பல் போன்ற தயாரிப்புகளை இந்தியாவில் இருந்து வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. அந்த வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும். மேக் இன் இந்தியாவை பிரதமர் மோடி கூறவில்லை. இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றி, ஏற்றுமதி செய்ய வேண்டும் என பிரதமர் எதிர்பார்க்கிறார் என்றார். கடலோர காவல் படை இயக்குனர் ஜெனரல் ராஜேந்திர சிங் கூறுகையில், ‘‘கடலோர பாதுகாப்பில், இந்த ரோந்துக் கப்பல் முக்கியமானது இந்த ரோந்து கப்பலில் நவீன சென்சார் கருவிகள் மற்றும் சாதனங்கள் உள்ளன. ஹெலிகாப்டரையும் கப்பலில் தரையிறக்க முடியும்’’ என்றார்.

மூலக்கதை