பனிச்சரிவில் சிக்கிய 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

தினகரன்  தினகரன்
பனிச்சரிவில் சிக்கிய 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

சிம்லா:  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவில் ராணுவ வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் 5 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள இந்தியா-சீன எல்லையில் ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைப்பிரிவினர் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷிப்கலா என்ற இடத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் 6 பேர் புதைந்தனர். இவர்களில் 4 பேர் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ஒரு வீரர் உத்தரகாண்ட், மற்றொருவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று முன்தினமே ஒரு வீரரின் உடல் மீட்கப்பட்டது. உயிரிழந்த வீரர் இமாச்சலப் பிரதேசத்தின் குமார்பூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ்குமார்(41) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மாயமான 5 வீரர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அந்த பகுதியில் நேற்று காலை வரை தொடர்ந்து  மழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் 4 முதல் 5 அடிக்கு அளவிற்கு பனிக்கட்டிகள் இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே பனிச்சரிவில் சிக்கி காயங்களுடன் 5 இந்தோ-திபெத் வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை