புல்வாமா தாக்குதல் பற்றி அறிந்த பிறகும் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார் பிரதமர் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதல் பற்றி அறிந்த பிறகும் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார் பிரதமர் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்தது பற்றி அறிந்த பிறகும் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் மோடி ஆவணப் படப்பிடிப்பில் இருந்தார்’ என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லபட்ட சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குவதாக பாஜ தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.  பாஜ.வின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று அளித்த பேட்டி: அதிகார பசியில் பிரதமர் மோடி, அரசு நிர்வாக கடமையை மறந்து விட்டார். தன்னை தேசப்பற்று மிக்கவர் என போலியாக கூறிக்கொள்ளும் அவர், புல்வாமா தாக்குதல் குறித்து அறிந்த நிலையிலும் கார்ப்பெட் தேசிய பூங்காவில் நடந்த ஆவணப் படப்பிடிப்பில் பங்கேற்றார். தொடர்ந்து படகு சவாரி மேற்கொள்வதில் ஆர்வம் செலுத்திய மோடி, இரவு 7 மணிக்கு கூட டீ குடிப்பதிலும், சமோசா சாப்பிடுவதுமாக இருந்தார். அப்போது ஒவ்வொரு இந்திய குடிமகனும் புல்வாமா தாக்குதலால் தனது உணவை தியாகம் ெசய்திருந்தனர். இது போன்ற செயல்பாட்டையா பிரதமரிடம் இருந்து நாம் எதிர்பார்த்தோம்? தனது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தல்லவா அவர் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். உளவுத்துறை தோல்வி அடைந்துள்ள இந்த முக்கியமான நேரத்தில் பிரதமர் மோடி தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது ஏற்க கூடியதல்ல. இவ்வாறு அவர் கூறினார். சுர்ஜிவாலா தனது பேட்டியின்போது, மோடியின் படப்பிடிப்பு பற்றி இந்தி பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தியை மேற்கோள் காட்டினார்.

மூலக்கதை