காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்பது வருத்தமானது: டிவிட்டரில் சிதம்பரம் கருத்து

தினகரன்  தினகரன்
காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்பது வருத்தமானது: டிவிட்டரில் சிதம்பரம் கருத்து

புதுடெல்லி: ‘காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என விரும்பும் சிலர், காஷ்மீர் மக்கள் இந்தியர்களாக இருக்கக் கூடாது என நினைக்கும் முரண்பாடான சூழல் வருத்தம் அளிக்கிறது’ என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14ம் தேதி நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியாயினர். இச்சம்பவத்தை அடுத்து டேராடூன், ஜம்மு, கொல்கத்தா, முசாபர் நகர் உட்பட நாட்டின் பல இடங்களில் படிக்கும் மற்றும் வேலைபார்க்கும் காஷ்மீர் இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இதனால், ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் பலர் சொந்த ஊர் திரும்பினர். மேகாலயா ஆளுநர் ததாகடா ராய் விடுத்த அறிக்கையில், ‘காஷ்மீரிகளின் தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். காஷ்மீருக்கு சுற்றுலா செல்வதையும் தவிர்க்க வேண்டும்’ என கூறியிருந்தார். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். ஆனால், காஷ்மீர் மக்கள் இந்தியர்களின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என நாம் விரும்புவதில்லை. இந்த முரண்பாடான சூழல் வருத்தம் அளிக்கிறது. குஜராத்தின் சர்தார் சரோவர் அணை அருகே 182 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை, மேகாலாய ஆளுநர் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவில் இடமில்லை என கூறும் நபர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை