உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்பு

தினகரன்  தினகரன்
உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்பு

புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், அதிக விலை கொடுத்து முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்திய பங்குதாரராக அனில் அம்பானி நிறுவனத்தை சேர்த்ததில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரபேல் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், ‘ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை நீதிமன்றத்தில் அளித்துள்ளது. ரபேல் விமானத்திற்கு கொடுக்கப்பட்ட விலைக்கு மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்திடம் ஒப்புதல் பெற்றதாக நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறி உள்ளது. ஆனால், அந்த சமயத்தில் சிஏஜி அறிக்கையே தயாரிக்கப்படவில்லை. எனவே, மீண்டும் இந்த விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.மனுதாரர்களில் ஒருவரான காங்கிரஸ் தலைவரும் வக்கீலுமான பிரசாந்த் பூஷண், இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று ஆஜராகி கோரிக்கை விடுத்தார். அதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘தீர்ப்பு அளித்த அமர்வில் இருந்த நீதிபதிகள் மாறிவிட்டதால் இது சிக்கலானது. எனினும், மனுவை பட்டியலிடுவதற்காக வேறு ஏதாவது செய்கிறோம்’’ என்றார்.

மூலக்கதை