காங்கிரஸ் கட்சி பிரமாண்ட பொதுக்கூட்டம் ராகுல்காந்தி இன்று திருப்பதி வருகை: 3 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் கட்சி பிரமாண்ட பொதுக்கூட்டம் ராகுல்காந்தி இன்று திருப்பதி வருகை: 3 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

திருமலை: காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள ராகுல்காந்தி இன்று திருப்பதி வருகிறார். இதில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கட்சி தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனந்தப்பூர் மாவட்டம், மடக்கசீராவில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மாநில தலைவர் ரகுவீராரெட்டி தலைமையில் பஸ் யாத்திரை தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 13 மாவட்டங்களில், 25 நாடாளுமன்ற தொகுதி வழியாக செல்லும் இந்த பஸ் யாத்திரை மார்ச் 3ம் தேதி காகுளம் பகுதியில் நிறைவு பெறுகிறது. இந்த பஸ் யாத்திரை இன்று திருப்பதிக்கு வர உள்ளது. இதையொட்டி திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.  இதையொட்டி ராகுல்காந்தி இன்று மதியம் 3 மணியளவில் சிறப்பு விமானத்தில் ரேணிகுண்டா விமான நிலையம் வந்து, அங்கிருந்து நேராக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட், கர்நாடகா துணை முதல்வர் பரமேஸ்வரப்பா, உள்துறை  அமைச்சர் சிவக்குமார், ஆந்திர மாநில தேர்தல் பொறுப்பாளர் உம்மன்சாண்டி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.  ராகுல்காந்தி வருகையையொட்டி ரேணிகுண்டா விமான நிலையம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை