முஷ்டாக் அலி டி20 போட்டி புதுச்சேரி வெற்றி: தமிழ்நாடு தோல்வி

தினகரன்  தினகரன்
முஷ்டாக் அலி டி20 போட்டி புதுச்சேரி வெற்றி: தமிழ்நாடு தோல்வி

சூரத்: சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி  ஐதராபாத் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  தமிழ்நாடு அணி 53 ரன்கள் வித்தியாசத்தில்  ராஜஸ்தான் அணியிடம் தோற்றது. சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு, ஐதராபாத், குஜராத், ரயில்வே, புதுச்சேரி, மகராஷ்டிரா உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, ஈ பிரிவுகளில் தலா 4 அணிகளும், சி பிரிவில் 2 அணிகளும், டி பிரிவில் 6 அணிகளும் இடம் பெற்றுள்ளன. சூரத்தில் நேற்று நடந்த போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு- ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் மனீந்தர் சிங்கும், 2வது ஓவரில் முருகன் அஸ்வின் பந்து வீச்சில் கர்வாலும் வெளியேறினர். அதனால் ராஜஸ்தான் அணி 2வது ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்து. அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று விளையாடினர். அதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. கேப்டன் லோம்ரர் ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் முருகன் அஸ்வின் 2 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர், தன்வார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய அஸ்வின் ரவிசந்திரன் தலைமையிலான தமிழக அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் ராஜஸ்தான் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. தமிழக அணியில் ஷாருக்கான் மட்டுமே அதிகபட்சமாக 23 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் தீபக் சாஹர், கலீல் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ரவி பிஷ்னாய் 2 விக்கெட்களையும், சவுத்திரி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ராஜஸ்தான் இந்த வெற்றியின் மூலம்  பி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இன்னொரு போட்டியில் ஈ பிரிவில்  இடம் பெற்றுள்ள புதுச்சேரி - ஐதராபாத் அணிகள் டெல்லியில் நேற்று மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அணியில் மற்றவர்கள் சுமாரான ரன்கள் எடுத்தாலும்  கேப்டன் ரோகித் 27 ரன்களும், டோக்ரா 89 ரன்களும் எடுக்க புதுச்சேரி அணி 20 ஓவர்களில்  6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில்  முகம்மது சிராஜ், முகம்மது ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், மிலிந்த் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து விளையாடி ஐதராபாத் அணி 20ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் புதுச்சேரி  3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஐதராபாத் அணியில் ரெட்டி 69 ரன்கள், அகர்வால் 31 ரன்களும் எடுத்தனர். புதுச்சேரி தரப்பில்  தாமரைக்கண்ணன் 4 விக்கெட்களும், ஃபாபித் அகமது 2 விக்கெட்களையும், பங்கஜ் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மூலக்கதை